மட்டக்களப்பு மாவட்டத்தின் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்களின் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (31) இடம்பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி ஜஸ்டினா ஜூலேகா முரளீதரன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின் போது, கருத்துத் தெரிவித்த அவர்; சிறுவர்களின் குரல்கள் வெளிவருவது பெருமையாக உள்ளதுடன் அவர்களின் நலன் தொடர்பாக செயற்படுவதற்கு அவசியமான சகல பங்களிப்புக்களையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதன்போது, மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ரி. மதிராஜ் கடந்த 2023 ஆம் ஆண்டு சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்களினால் மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சிறுவர் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நலன் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் மற்றும் இவ்வாண்டில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டம் தொடர்பாக தெளிவுபடுத்தினார்.
இந்நிகழ்வில், உரையாற்றிய மாவட்ட சிறுவர் சபைத் தலைவர் தேவரூபன் சிறுவர்களுக்கு ‘படி படி’ என்று சுமையைச் சுமத்தி அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்காது சிறந்த திறமைசாலிகளாக முன்னேற்றுவதற்குத் தேவையான விழிப்புணர்வை வழங்க வேண்டும் என்பதுடன் பாடசாலைகளில் மாணவ மன்றங்கள் குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது நடாத்தப்படுதல் அவசியம், என்றும் கோரிக்கை விடுத்தார்.
இக்கலந்துரையாடலின் போது, எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட சிறுவர்களின் நலன் கருதி, பாடசாலை ஆசிரியர்கள் மேலதிக வகுப்புக்களை நடாத்தும் போது கட்டணம் அறவிடக் கூடாது, ஞாயிற்றுக் கிழமைகளில் அறநெறிக் கல்விக்கு மாத்திரம் காலைப் பொழுதைப் பயன்படுத்தி, மீதிப் பொழுதை பிள்ளைகள் தமது பெற்றோருடன் சந்தோசமாகக் கழிக்க வாய்ப்பளிக்க வேண்டும், தினமும் மாலை ஆறு மணிக்குப் பின்னர் மேலதிக வகுப்புக்களை நடாத்த முடியாது ஆகிய மூன்று பிரதான விடயங்கள் குறித்துக் காணப்படும் சுற்றுநிருபத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டதுடன், அதனை விரைவில் அதனை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மேலும், தேசிய சிறுவர் சபை இணைச் செயலாளர் ரனா சுக்ரா மற்றும் மாவட்ட சிறுவர் சபை உறுப்பினர் அநிர்விகா ஆகியோர் அண்மையில் நடைபெற்ற தேசிய சிறுவர் சபைத் தேர்தல் குறித்து தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் பிரிவின் பதவிநிலை உதவியாளர் றிழா, மாவட்ட உளவளத்துணை உதவியாளர் என். ஜனார்த்தனி, 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பணியாற்றும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், மாவட்ட மற்றும் பிரதேச சிறுவர் சபை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதேவேளை, தேசிய சிறுவர் சபையில் கலந்துகொண்டு திறமைகளை வெளிப்படுத்திய சிறுவர் சபை உறுப்பினர்களுக்கான சான்றிதழ்கள் அரசாங்க அதிபரினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.