நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதற்கு அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவிப்பு!!

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதற்கு அரசாங்கம் பல் வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் இன்று (26) திகதி மட்டக்களப்பு ஆரையம்பதியில் இடம்பெற்ற வெல்த் கோப் வங்கியின் நான்வது கிளையின் திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வெல்த் கோப் வங்கியின் தலைவர் தேசகீர்த்தி மொகோட்டி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் தட்சணகௌரி டினேஸ், வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி காஞ்சன பபசர மனஞ்சேன, மண்முனைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் ஜே.சர்வேஸ்வரன், வங்கி உத்தியோகத்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தென்மாகாணங்களில் காணப்படும் இவ் வங்கியானது வடகிழக்கு மாகாணங்களில் அதிலும் குறிப்பாக மட்டக்களப்பில் தமது நான்காவது கிளையினவு இன்று திறந்து வைத்துள்ளது.

கிராமிய மட்டத்தில் தொழில்துறையிணையும் கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்தும் வகையிலான கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளை இணைப்பதற்காகவும் இந்த வங்கிகள் திறந்து வைக்கப்படுவதுடன் இதன் கிளைகள் எதிர்வரும் காலங்களில் வடகிழக்கிலுள்ள அனைத்து பகுதிகளிலும் திறந்து வைக்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த நான்காவது வங்கிக் கிளையினை இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் நாடா வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்து வைத்ததுடன், புதிய கிளையின் கொடுக்கல் வாங்கலையும் ஆரம்பித்து வைத்துள்ளார்.

இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மக்களுடைய சுமையை குறைப்பதற்கும் அரசாங்கம் கூடிய கவனத்தினை எடுத்து செயற்பட்டு வருவதுடன், எமது மாவட்டத்தில் விலை கட்டுப்பாட்டு சபையின் ஊடாக நிர்ணய விலையில்  பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என்பதனை கவனத்திற் கொண்டு எதிர்வரும் நாட்களில் உரிய திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல சுற்றி வளைப்புக்களை மேற்கொண்டு மக்களுக்கு நியாயமான விலையில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள வாய்ப்பினை ஏற்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், மாவட்டத்தில் சத்தோச விற்பனை நிலையங்களை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருவதுடன், சத்தோச ஊடாகவும் மக்களுக்கான பொருட்களை நியாயமான விலையில் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.