ஆஸி பூர்வகுடிகள் இழந்த தேசம் : அபரோஜின வாக்கெடுப்பு தோல்வி – ஐங்கரன் விக்கினேஸ்வரா

கடந்த வருடம் அக்டோபர் 14இல் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் 60 வீதத்திற்கு மேற்பட்ட அவுஸ்திரேலியர்கள் பழங்குடியினருக்கான சிறப்பு அமைப்பை ஆதரிக்கவில்லை.
 
பழங்குடியினர் தொடர்பான பொது வாக்கெடுப்புத் தோல்விக்குப் பொறுப்பேற்றுக் கொண்டார் அவுஸ்திரேலியப் பிரதமர்.

பழங்குடியின குரல் வாக்கெடுப்பு :
பிரதமர் ஆண்டனி அல்பனிஸ், பழங்குடியினருக்கான சிறப்பு அமைப்பை உருவாக்குவது தொடர்பில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பின் தோல்விக்குத் தானும் பொறுப்பேற்றுக் கொள்வதாகக் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் மக்கள்தொகை 26 மில்லியன் ஆகும். இதில் பழங்குடி அவுஸ்திரேலியர்கள் சுமார் 3 வீதம் மட்டுமே இருக்கிறார்கள். ஆனால் அதிகாரப்பூர்வ தரவுகள், இந்நாட்டின் சிறைவாசிகளில் கால் பகுதி இவர்களை கொண்டது என்றும், சிறிய குற்றங்களுக்காகவே பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலியாவில் அபோரிஜின பழங்குடியின உரிமையும், கடந்த ஐம்பது ஆண்டுகளாக வெற்றிகரமான வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்பதும் உண்மையே.
பழங்குடியின மக்கள் அபோரிஜினர்:
அவுஸ்திரேலியாவில் பல நூற்றாண்டுகளாக வாழும் பழங்குடியின மக்கள் அபோரிஜின்ஸ் (Aborigins). இவர்களுக்கு இதுவரை அரசியலமைப்பு ரீதியாக அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் தேசிய கொள்கை வகுப்பில் எந்த பங்களிப்பும் இன்றி இருந்து வருகின்றனர்.
அதை மாற்றும் முயற்சியின் முதல்படியாக, பழங்குடியின மக்கள் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவில் வசிக்கும் மக்களுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் வழங்கவேண்டுமா, என்பதை தீர்மானிக்க இந்நாட்டு மக்களிடையே இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அவஸ்திரேலியா தினம் – 26 ஜனவரி:
அவுஸ்திரேலியா தினம் (Australia Day) “26 ஜனவரி” என்பது இந்த நாட்டின் பாரம்பரிய விழுமியங்கள், சுதந்திரங்கள் மற்றும் பொழுது போக்குகளைக் கொண்டாடும் ஒரு நாள் என்றுதான் உலகிற்குத் தெரியும்.
ஆண்டு தோறும் அவுஸ்திரேலியா தினம், பரவலாக மக்கள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறி விட்டாலும், குறிப்பாக அபரோஜின பூர்வீக குடி மக்களுக்கு வேதனையளிக்கிறது. அதனைக் கொண்டாடுவது ஏன் அவர்களிடத்தில் துக்கத்தை ஏற்படுத்துகிறது பற்றிய வரலாற்று அலசலாக இக்கட்டுரை பிரசுரமாகிறது.
ஆயினும் பல பூர்வீக குடி மக்களுக்கு, இந்த நாள் மிகவும் வித்தியாசமான உணர்வுகளை உண்டாக்குகிறது. பிரித்தானிய காலனித்துவ படையெடுப்பின் தொடக்கத்தைக் குறிக்கும் இந்த நாள் பலருக்கும் துக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தப் படையெடுப்புகளின் விளைவாக போர், இனப்படுகொலை, இனவெறி மற்றும் பூர்வீக குடி மக்களுக்கு எதிரான பிற அட்டூழியங்கள், பல தலைமுறைகளாக நடந்ததை, நடப்பதை நினைவுபடுத்தும் நாளாக அமைந்துள்றது.
ஐரோப்பியரோ சீனரோ கால் வைக்க முன்னமிருந்தே கிட்டத்தட்ட 45000- 60000 ஆண்டுகளுக்கும் மேலாக பழங்குடியின அபரோஜின மக்கள் (aboriginal Australians) அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார்கள்.
இதுவரையிலான கணிப்புகளின்படி அவுஸ்திரேலியாவில் 60000 ஆண்டுகளுக்கு முன் முதல் மனித இனம் காலடி எடுத்து வைத்தது. அதன் பிறகே அவுஸ்திரேலியாவுக்குள் 18ம் நூற்றாண்டில் தான் ஐரோப்பியர்கள் நுழைந்தனர். இடைப்பட்ட காலத்தில் அவுஸ்திரேலியா தனித்திருந்தது. எந்த இனக் கலப்பும் நடக்கவில்லை, வேறு யாருமே நுழையவில்லை என்றும் நம்பப்பட்டு வந்தது.
இந்தப் பழங்குடியினர் எல்லாருமே ஒரே மொழியைப் பேசுபவர்களல்லர். ஐரோப்பியக் குடியேற்றத்துக்கு (1788) முன்பு இவர்கள் 700 மொழிகளை
பேசி வருகின்றனர். அவற்றுள் கூறி, முர்ரி, நுங்கர், யமாட்ஜி, வங்காய், அனங்கு, யாப்பா, யொல்ங்கு, பலவ ஆகியன பேச்சு வழக்கு மொழிகளாகும்.
அபரோஜின பழங்குடியினர் –
அவுஸ்திரேலிய நிலப்பரப்பில் வாழ்வோர், ரொறஸ் நீரிணைத் தீவுக்காரர்(Torres Strait Islanders) என இரு வகையாகப் பிரிக்கலாம்.
ரொரஸ் நீரிணை தீவுகள் பப்புவா நியூகினிக்கும் அவுஸ்திரேலியப் பெருநிலப்பரப்பின் வடமுனைக்கும் இடைப்பட்ட தீவுகளாகும்.
‘களவாடப்பட்ட தலைமுறை’ – stolen generation :
ஐரோப்பியரால் ஆக்கிரமிக்கப்பட்ட அபரோஜின பழங்குடியினரின் பூர்வீக
அவுஸ்திரேலிய நிலப்பரப்பில் பரவிய அம்மை, சின்னம்மை, காசநோய், இருமல், மற்றும் சுவாச நோய்த் தாக்குதலுக்கு அதிகளவில் இப்பூர்வீக
மக்கள் பாதிக்கப்பட்டு அதிகளவில் இறந்தார்கள். அதே வேளை வெள்ளையர்களாலும் இந்த மக்கள் அழிக்கப்பட்டார்கள். குறிப்பாக ‘வேட்டையாடி’யதில் தஸ்மேனியாவிலிருந்த (Tasmania) ஒரு பழங்குடி இனமே முழுமையாக அழிக்கப்பட்டது.
1950ம் ஆண்டு வரை பெற்றோரில் ஒருவர் வெள்ளையராயும் மற்றவர் பழங்குடியினராயும் இருந்து பிறக்கும் கலப்புப் பிள்ளைகளை பலவந்தமாக இதற்கென்றே ஏற்படுத்தப்பட்ட நிலையங்களில் அரசே சேர்த்துவிடுமபழங்குடியினரில் இப்படிக் கொண்டு செல்லப்பட்ட குழந்தைகள் ‘களவாடப்பட்ட தலைமுறை’ (stolen generation) என அறியப்படுகின்றனர். இதனைப் பற்றிய அயர வைக்கும் உண்மைக்கதை சொல்லும் படம் “Rabbit Proof Fence” துயர வரலாற்றின் முக்கியமான சான்றாகும்.
அபரோஜின மண்ணில் அத்து மீறிய ஆக்க்கிரமிப்பு:
காலனித்துவ அந்நியர்களின் ஆக்கிரமிப்பு இல்லாமல், அமைதிப் பூங்காவாவாக இருந்த அவுஸ்திரேலியா கண்டத்திற்கு 1770-ல் காப்டன் குக் (Captain Cook) என்பவர்தான் இக்கண்டத்தை கண்டு பிடித்து உலகிற்கு அறிமுகம் செய்தார் என ஆங்கிலேயர் வரலாற்று ஏடுகளில் பறை சாற்றுகின்றனர்.
அதன் பின்னரே அவுஸ்திரேலியா கண்டத்தை பிரித்தானியர்கள் சொந்தம் கொண்டாடி முழுமையாக ஆக்கிரமித்தனர். இதனை உறுதி செய்யும் விதமாக அவுஸ்திரேலிய நிலப்பரப்பை “யாருமற்ற இடம் (Terra Nullium)” என பிரகப்படுத்தினார்கள்.
கறுப்பு யுத்தமும் இனப்படுகொலையும்:
1834 –ல் பிஞ்சாரா என்ற இடத்தில் இனப்படுகொலையின் ஆரம்பமாக
80 க்கும் மேற்பட்ட அபரோஜினியரை
சுட்டுக்கொன்றனர். தஸ்மானியா மாநிலத்தில் குடியேறிய ஆங்கிலேயர்கள் 10,000 க்கும் மேற்பட்ட அபரோஜினியரை கொன்று குவித்தனர்.
கொடூரமாக நீர் நிலைகளில் நஞ்சை கலந்து வைத்தனர்.ஆங்கிலேயர்களால் மாவில் விஷம் வைத்து அபரோஜினியருக்கு விநியோகித்து அவர்களை அழித்தனர். இதனை சரித்திர ஆசிரியர்கள் “கறுப்பு யுத்தம்(Black War)” என பதிவு செய்துள்ளனர்.
அரசின் மன்னிப்பு கோரல் :
களவாடப்பட்ட தலைமுறையினர் குறித்தும், அபரோஜின பழங்குடியின மக்கள் மீதான படுகொலைக்காக அன்றைய அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரெட் (Kevin Rudd), 13.02.2008 அன்று கான்பெரா தலைநகர் பாராளமன்றில் தனது உரை மூலமாக பொது மக்களிடம், பொது மன்னிப்பு கேட்டு இருபது நிமிடங்கள் உரையாற்றினார். இதுவே முதன்முறையாக பழங்குடி பொது மக்களிடம் கேட்ட பொது மன்னிப்பாகும்.