( அஸ்ஹர் இப்றாஹிம்) திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வினாயகபுரத்தில் உள்ளூர் ஆயுதங்கள் தயாரிக்கும் நிலையமொன்றை விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டுள்ளதுடன் மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பிரதேசத்தில் மேற் கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் போது இலங்கையில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் மீட்கப்பட்டன.
இதே வேளை, நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் துப்பாக்கி ஒன்றும், இரும்பு குழாய்கள் மூன்றும், இரும்பு வெட்டும் இயந்திரம் ஒன்றும், ஒட்டி உருக்கும் இயந்திரம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி வருண ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 34, 42 மற்றும் 54 வயதிற்குட்பட்ட திருக்கோவில் மற்றும் கஞ்சிகுடிச்சாறு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.