அபிவிருத்தி , நல்வாழ்வு திட்டங்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டால் ஐஎம்எம் உதவி நிறுத்தப்படும் வாய்ப்பு உண்டு ரிசாட் பதியுதீன் எம்.பி.

வாஸ் கூஞ்ஞ) 

ஐஎம்எம் திட்டம் வருகின்றபோது அபிவிருத்தி , நல்வாழ்வு திட்டங்களை அரசியல் மயப்படுத்த வேண்டாம் என கூறப்பட்டிருந்தபோதும் மன்னார் மாவட்டத்தில் அவை நேர்மறையாகவே காணப்படகின்றத என முன்னாள் அமைச்சரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார்.

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அமைப்புக்கள் சிலவற்றிற்கு தனது பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தின் நிதியில் பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில்  வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்றது.

இதன்போது ரிசாட் பதியுதீன் அவர்கள் தொடர்ந்து உரையாற்றும்போது

2021 ஆம் ஆண்டு பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தின் எனது நிதியிலிருந்து இப் பகுதியில் 16 திட்டங்களுக்கு இங்கு நிதி ஒதுக்கீடு செய்திருந்தேன்.

இதில் எட்டு அமைப்புக்கள் என்னுடன் தொடர்பு கொண்டு அவர்கள் உடன் இந்த உதவியை வழங்குங்குங்கள் என தெரிவித்து அக்காலத்திலேயே பெற்றுக் கொண்டனர்.

ஆனால் இங்கு வந்திருக்கும் ஏனையோர் பொறுமையாக இருந்து இன்று அவற்றை பெறுவதற்காக வந்திருப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.

மாந்தை பிரதேசம் விவசாயிகள் நிறைந்த ஒரு பிரதேசம். தற்பொழுது இவர்கள் மிகவும் கஸ்ட நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

நமது ஆட்சியாளர்கள் எமது நாட்டை குட்டிச் சுவராக்கி விட்டனர். நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து காணப்படுகின்றது.

எமக்கு உணவு வழங்கி வரும் விவசாயிகளை வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்வதற்கு வழி சமைக்கப்பட்டிருந்தது.

இந்த துர்பாக்கிய நிலையால் விவசாயிகள் மட்டுமல்ல எமது நாடும் மிகவும் பாதிப்புகளுக்கு உள்ளாகியது. இதனால் சர்வதேச மட்டத்தில் ஒரு கறுப்பு புள்ளியிட்ட நாடாக இடம்பெற்றுள்ளது.

இக்கட்டான நிலையில் எமது நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பு எம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. நாம் விரும்பியோ விரும்பாமலோ இந்நாட்டின் ஒவ்வொருவரும் வெளி நாடுகளுக்கு கடனாளிகளாக இருக்கின்றோம்.

இது மாற வேண்டும் என்று ஒவ்வொரு குடி மகனும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். கடந்த நான்கு வருடங்கள் மிகவும் இக்கட்டான நிலையில் எமது நாடு காணப்பட்டது. குறிப்பிட்ட ஓர் இனம் கடந்த அரசை  தெரிவு செய்தமையால் இறுமாப்புடன் வாழ்ந்தது அதற்கு காரணமாகும்.

யுத்தக் காலத்தைவிட மிக மோசமான நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். அதை விடுத்து புதிய ஜனாதிபதி வந்தார். அவர் வந்து யாவும் அரசியல் மயமாக்கப்பட்ட நிலமையே காணப்படுகின்றது.

அதாவது வன்னித் தொகுதிக்கு ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளைக் கொண்டு பலதரப்பட்ட அபிவிருத்தி செய்து வந்தோம். ஆனால் இப்பொழுது அதுவும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐஎம்எம் நிதிக்காக எமது மக்கள் மத்தியில் அதிகமான வரி சுமைகள் சுமத்தப்பட்டுள்ளது. இதனால் பொருட்களின் விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஐஎம்எம் திட்டம் வருகின்றபோது அபிவிருத்தி நல்வாழ்வு திட்டங்களை அரசியல் மயப்படுத்த வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. ஆனால் எமது பகுதியில் நேர்மறையான செயல்பாடுகளே இடம்பெற்று வருகின்றது.

இது ஐஎம்எம் க்கு தெரிந்தால் அவர்களின் திட்டங்கள் நிறுத்தப்படும் வாய்ப்புக்கள் இருக்கின்றது. ஆகவே வாழ்வாதாரத்துக்கான உதவிகள் செய்யப்படும்போது அரசியல் மயமாக்காது இருக்க வேண்டும் என இவ்வாறு தெரிவித்தார்.