கண்டி புகையிரத நிலையத்தை சுத்தம் செய்த நோர்வே மாணவர்கள்.

(அஸ்ஹர்   இப்றாஹிம்)

மனிதன் தன்னையும் தனது குடும்பத்தினரையும் நேசிப்பது போன்று தனது சூழலையும் நேசிக்க வேண்டும்.சூழலை நாம் நேசித்தால் சூழல் நம்மை நேசிக்கும்.உலகில் பிறந்த அனைவருக்கும் மனிதம் இருக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது.

உலகில் ஒவ்வொரு வருடமும் சூழல் ஒன்று இருக்கின்றது, அதனை நாம் சுத்தமாகவும்,சுகாதாரமாகவும்  வைத்திருக்க வேண்டும் என்று ஞாபகப்படுத்தும் வகையில் உலக சுற்றாடல் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

அதனையும்  ஓரிரு தினங்களில் மனிதன் மறந்து விடுகின்றான்.

நீர்,நிலம், வளி என்ற வகையில் மனிதனின் ஆய்ந்தோய்ந்து பாராத செயற்பாட்டினால் பல வழிகளில் நம்மை அறியாமலேயே சூழல் மாசடைகின்றது.
சூழலில் குப்பைகள் சேர்ந்தால் பிரதேசத்திலுள்ள ஆர்வலர்கள் சிலர் சிரமதானம் என்ற போர்வையில் சுத்தம் செய்து கூடிக்கலைவது மரபாகி விட்டது.அப்படியான செயற்பாட்டின் பின்னர் சூழல் முகாமைத்துவம் செய்யப்பட வேண்டும் என்பதை மறந்து விடுகின்றனர்.
நமது நாட்டிலுள்ள மக்களை விட வெளிநாட்டவர்களிடம் சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதில் சிறு வயது தொடக்கம் மனதில் ஊட்டப்படுகின்றது. அதனால்  அம் மக்கள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் நோய் நொடியின்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
அண்மையில்  இலங்கைக்கு விஜயம் செய்த நோர்வே பல்கலைக்கழக மாணவர்கள் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் அதிகம் சஞ்சரிக்கும் கண்டி புகையிரத நிலையத்தை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டமை எம் அனைவரையமே வெட்கித் தலை குனிய வைத்துள்ளது.
இச் செயற்பாடு எமது நாட்டு மக்களுக்கு அவர்கள் ஏற்படுத்தியுள்ள பெரும் படிப்பினையாகும்.