(சுமன்) ஆட்சியாளர்களின் அதிகாரப் பசியால்; நம் நாட்டின் பாரம்பரியத்தை காலில் போட்டு மிதியாது நமது அரசியலமைப்பினை முறையாக அமுல்ப்படுத்துவதே நாட்டில் உண்மையும், நல்லிணக்கமும் ஐக்கியமும் ஏற்படுவதற்கு மார்க்கமேயொழிய ஆணைக்குழுச் சட்டம் மூலம் இவற்றினை ஏற்படுத்துவதென்பது மந்திரத்தால் மாங்காய் விழுத்தும் செயற்பாடே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.
நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிக்கத்துக்கான ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சட்டமூலமென்றினால், நாட்டில் உண்மை, இன நல்லிணக்கம், ஒற்றுமை ஏற்படும் என்ற “மாதனமுத்தா” சிந்தனையின் வெளிப்பாடே இச் சட்டமூலம் என நான் கருதுகின்றேன்.
மந்திரத்தால் மாங்காய் வீழ்த்துவது எவ்வளவு சாத்தியமோ அவ்வாறே இச் சட்டமூலத்தால் நம் நாட்டில் உண்மை, ஐக்கியம், நல்லிணக்கம் ஏற்படும் என்று கருதும் செயற்பாடுமாகும். இச்சட்டமூலத்தின் முன்னுரையினை கவனமாக நோக்குவோமானால் ஒரு பேருண்மை யொன்றினை நாம்புரிந்து கொள்ள முடியும்.
1978ஆம் ஆண்டு எம்மால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின் உறுப்புரைகள் குறிப்பாக மக்களது அடிப்படை உரிமைகள், சமத்துவம், நீதித்துறைச் சுதந்திரம், சுயாதீனத்தன்மை, சட்டத்தின் முன் யாவரும் சமமான தன்மைகள் இதுவரை முறையாக பேணப்படவில்லை என்ற உண்மையினை நாம் புரிந்து கொள்ளமுடியும்.
1978 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அரசியலமைப்பு உறுப்புரிமைகளை அடைந்துகொள்வதற்காக 2024ஆம் ஆண்டு நாம் இச் சட்டமூலத்தினைக் கொண்டு வருகிறோம் என்பதுதான் இச் சட்டமூலம் தொடர்பான எனது பார்வையாகும்.
இச்சட்டமூலம் எமது அரசியலமைப்பின் உறுப்புரைகள் முழுமையாகப் பின்பற்றப்படவில்லை என்பதை வெளிப்படையாகவே ஏற்றுக்கொள்கிறது. நமது நாட்டில் அரசியலமைப்பினால் நமது அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்ட சட்டவாட்சித் தத்துவம் முறையாக பின்பற்றப்படுகிறதா.
சட்டவாட்சி தத்துவத்தின் கோட் பார்தர் “டைசி” அவர்கள் கூறிய சட்டவாட்சிக் கோட்பாடு வலுவாக இயங்குகின்றதா? நமது நாட்டில் மீண்டும் மீண்டும் வன்செயல் நிகழாமையை நாம் ஊக்குவிக்கின்றோமா, இல்லை மீண்டும் மீண்டும் வன்செயல் நடைபெறுவதை நாம் ஊக்குவிக்கின்றோமா என்பது போன்ற வினாக்களையெல்லாம் இச் சட்டமூலத்தின் வாசகங்கள் என்னுள் கேட்கத் தூண்டுகின்றது.
அரசியலமைப்பை உருவாக்கிய ஆட்சியாளர்களே அரசியலமைப்பை மீறுவதும் அரசியலமைப்பைப் பேணிப் பாதுகாப்பதாக சத்தியப்பிரமாணம் செய்த ஆட்சியாளர்களே அவற்றை மீறுவதும், நீதித்துறையினை நினைத்தபடி வளைப்பதும் தான் நமது நாட்டின் நல்லிணக்க, சமத்துவத்துக்கான இலக்கணமா என இந்த உயரிய சபையில் கேள்வியெழுப்ப விரும்புகின்றேன்.
இலங்கையின் பல்லினத்தன்மை, இலங்கையின் பல் மதத்தன்மை, இலங்கையின் பல் காலாசாரத் தன்மை, இலங்கை மொழி உரிமைகள் முறையாக இதய சுத்தியோடு ஏற்றுக் கொண்டு பின்பற்றப்படாமல் சட்டமூலம் ஒன்றின் மூலம் இவற்றை ஏற்படுத்திவிடலாம் என்பது உண்மையிலேயே நகைப்புக்குரிய விடயமேயாகும்.
உண்மையிலேயே நல்லிணக்கம் என்பது ஆட்சியாளரதும் நாட்டு மக்களதும் மனங்களிலிருந்து உருவாக வேண்டிய ஒன்று. இச்சட்டமூலம் நாட்டை மேலம் சுரண்டுவதற்கும், எம் நாட்டின் மீது இன நல்லிணக்கம் தொடர்பாக சர்வதேச சமூகங்களால் ஏற்பட்டுவரும் அழுத்தத்தைக் குறைப்பதற்குமான ஒரு செயற்பாடாகவே இதனை நான் நேக்குகின்றேன்.
நமது நாட்டில் சட்டத்தின் முன் சமம் என்பது நடைமுறையிலுள்ளதா என்பதற்கு சிறிய உதாரணம், இன நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதற்கும், மத முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கும், நில ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கும், காரணமானவர்கள் யார்? அண்மைக்காலமாக இத்தகைய நடவடிக்கைகளில் சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டும் பொலிசார், இராணுவ உத்தியோகத்தர்களுக்கு முன்நிலையிலேயே இத்தகைய அபாயகரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை சமூக வலைத்தளங்களில் நாம் கண்டுகோண்டோம். இனங்களுக்கிடையே, மதங்களுக்கிடையே முரண்பாட்டை விதைக்கின்றார்கள் என்று கிறிஸ்தவ மதகுரு ஒருவர் கைது செய்யப்பட்ட அதே வேளை அவரை விட மோசமாக ஐ.சீ.சீ.பி.ஆர் விதிமுறைகளுக்கு முரணாண நடவடிக்கைகளில் ஈடுபட்ட பௌத்த மதகுருமார் சட்டத்தினால் பாதுகாக்கப்படுகின்றமையே எமது நாட்டின் வரலாறு.
நம் நாடு சுபீட்சம் அடைய வேண்டுமானால் சுபீட்சமான ஒரு நாட்டினை அடுத்த தலைமுறைக்கு வழங்க இன்றைய ஆட்சியாளர்கள் உண்மையாக விரும்புபவர்களாக இருந்தால், உண்மையான தேசப்பற்றாளர்களாக இன்றைய ஆட்சியாளர்கள் இருந்தால், நம்நாட்டின் பல்லினத் தன்மை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அரசியலமைப்பின் உறுப்புரைகள் எழுத்தில் மாத்திரம் அமையாது ஆட்சியாளர்களின் இதயத்திலிருந்த இதயசுத்தியுடன், அமுல் நடத்தப்படுமாக இருந்தால் இந்த சட்டமூலம் தேவையற்ற ஒன்றாகவே நான் கருதுகின்றேன்.
நாட்டின் இன்றைய பொருளாதார நிலையில் இச் சட்டமூலம் மேலும் சுமையாக அமையும் என்றே நான் கருதுகின்றேன். வேண்டுமானால் ஆட்சியாளர்களின் உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு, அல்லது நிதியளிப்பவர்களுக்கு உயர் பதவிகளை வழங்குவதற்கும் மேலும் ஒரு ஆணைக்குழு உருவாக்கப்படுவதாகவே இச் சட்டமூலத்தைப் பார்க்கின்றேன்.
எமது நாடு பாரம்பரிய பல்லினத்தன்மை கொண்ட நாடு. பல்லினத்தன்மையை மதித்த ஒரு நாடு. உலகத்தின் எந்தவொரு நாட்டிலும் இல்லாதவாறு அனைத்து மதக்குழுவினரும் ஒரே இடத்தில் தத்தமது மத வழிபாட்டினை அனுஷ்டிக்கும் பழம் பெருமை மிக்க பாரம்பரியம் கொண்டது எமது நாடு, சிவளொளிபாதம், கதிர்காமம் போன்ற புண்ணிய நிலங்கள் இதற்;குத் தக்க உதாரணங்களாகும்.
ஆட்சியாளர்களின் அதிகாரப் பசியால்; இத்தகைய நம் பாரம்பரியத்தை காலில் போட்டு மிதியாது நமது அரசியலமைப்பினை முறையாக அமுல் நடத்துங்கள் முறையான சட்ட ஆட்சியினை பேணுங்கள், சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை என்பதனை ஆட்சியாளர்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் உணர்த்துங்கள். நம் நாட்டில் உண்மையும், நல்லிணக்கமும் ஐக்கியமும் ஏற்படுவதற்கு இதுவே மார்க்கமேயொழிய இச் சட்டமூலத்தின் மூலம் இவற்றினை ஏற்படுத்துவதென்பது மந்திரத்தால் மாங்காய் விழுத்தும் மாதன முத்தாக்களின் மார்கமென்று நான் ஆரம்பத்தில் கூறியதை மீண்டும் நினைவுறுத்துகின்றேன்.
இந்த உண்மை ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவொன்று இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்குவதற்குத் தேவையற்றது.
கடந்த வாரம் ஜனாதிபதி அவர்கள் வடமாகாண விஜயத்தின் போது நல்லிணக்கத்தை ஏற்படுத்துவோமானால் பொருளாதார ரீதியாக நம் நாடு முன்னேற்றம் அடையும் என்று கூறியிருந்தார். ஆனால் இங்கு மதங்களுக்கிடையே நல்லிணக்கம் உருவாகத் தேவையில்லை. இனங்களுக்கிடையிலேயே நல்லிணக்கம் உருவாக்கப்பட வேண்டும். இந்த ஆணைக்குழு ஐந்து வருடங்களுக்கானது என்பதை வர்த்தமானி மூலம் அறியக் கூடியதாக இருக்கின்றது. அடுத்த ஐந்து வருடங்களிலே தான் ஜனாதிபதியாக மீண்டும் தெரிவாக வேண்டும் என்பதற்குரிய ஒரு பிரச்சாரமாகவே நான் இதைப் பார்க்கின்றேன்.
1983ல் இருந்து 2009 வரை வடக்கு கிழக்கிலே நடைபெற்ற அநியாயங்களுக்கு ஒரு நீதியைக் கண்டறிவதற்காக இந்த ஆணைக்குழு அமைப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால் 1983லே வடகிழக்கை விட தெற்கிலேயே தமிழர்கள் அநியாயமாக 3000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். அவர்களுக்கான நீதி கிடைக்காமலேயே செல்கின்றது.
உண்மையிலேயே ஜனாதிபதி அவர்களோ சரி அல்லது பெரும்பான்மைக் கட்சிகளின் தலைவர்களோ, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெல்ல வேண்டும் என்று எண்ணுபவர்களோ, பாராளுமன்றத்திலே தங்கள் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்று நினைப்பவர்களோ நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவை அமைப்பதற்குப் பதிலாக பெரும்பான்மை இன மக்கள் மத்தியிலே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
இன்றும் கூட பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றார்கள். இருபது முப்பது வருடங்களுக்கு மேலாக அரசியற் கைதிகளாக இருப்பவர்கள் விடுவிக்கப்படாமல் இருக்கின்றார்கள். காணி அபகரிப்பு வடகிழக்கிலே தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. மயிலத்தமடு மாதவணை போன்ற பிரதேசங்களிலே பண்ணையாளர்கள் அடித்து விரப்பட்டு பெரும்பான்மையினத்தவர்கள் குடியேற்றப்பட்டுள்ளதுடன், பண்;ணையாளர்கள் மாடுகள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான நிலைமைகளில் எவ்வாறு இன நல்லிணக்கம் ஏற்படும்.
ஜனாதிபதித் தேர்தலை நடத்த முற்படும் இந்த ஜனாதிபதியும் அரசாங்கமும் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு எந்த எத்தணிப்பும் இல்லை. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாகக் கொண்டுவரப்பட்ட மாகாணசபைத் தேர்தலை குறைந்தது ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் போதாவது வைத்தால் செலவுகளையும் குறைக்கலாம் இன நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தலாம் என்று தெரிவித்தார்.