(ஏறாவூர் நிருபர் நாஸர்) பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் விடுத்துள்ள பணிப்புரைக்கமைவாக யுக்திய என்ற தேசிய திட்டத்தின்கீழ் போதைப்பொருட்களுக்கெதிரான பாரிய தேடுதல் வேட்டை மட்டக்களப்பு – மயிலம்பாவெளி பிரதேசத்தில் நடைபெற்றது.
விசேட அதிரடிப்படை, மட்டக்களப்பு பிராந்திய போக்குவரத்துப்பொலிஸார் ஏறாவூர்ப் பொலிஸாருடன் இணைந்து சுமார் நாற்பதுபேர் மோப்ப நாயின் உதவியுடன் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது சுங்க வரி செலுத்தாது எமது நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான நான்காயிரத்து ஐந்நூறு வெளிநாட்டு சிகரெட்டுக்கள் பயணப்பொதிகளிலிருந்து கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின்பேரில் ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர்கள் (08.01.2024 திங்கட்கிழமை) ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜர்செய்யப்படவுள்ளனர்.
தூரஇடங்களிலிருந்து மட்டக்களப்பு ஊடாக பயணம் செய்த பத்து பஸ் வண்டிகள், கொள்கலன் வாகனங்கள் மற்றும் லொறிகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
இதன்போது கட்டுநாயக்கவிலிருந்து கல்முனை நோக்கிச்சென்று கொண்டிருந்த பஸ் வண்டியில் பயணம் செய்தவர்களின் பயணப்பொதிகளிலிருந்து இந்த சிகரெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
சுமார் நான்கு மணிநேரம் இத்தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மட்டக்களப்பு பிராந்திய போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சரத் சந்ர தெரிவித்தார்.
(ஏறாவூர் நாஸர்)