உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான      இடைக்கால செயலகத்தின் அதிகாரிகள் குழு    கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம்.

(ஏறாவூர் நிருபர்  நாஸர்)   ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ள           உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான                 இடைக்கால செயலகத்தின் அதிகாரிகள் குழு      05.01.2024   கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்தது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு – வந்தாறுமூலை வளாகத்தில்      பதில் உபவேந்தர் ரீ. பிரபாகரன் தலைமையில்                           இங்கு விசேட சந்திப்பு நடைபெற்றது.
தேசிய ரீதியில் பொதுமக்களது கருத்துக்களைக் கேட்டறிவது                இக்குழுவினரின் பிரதான நோக்கமென தெரிவிக்கப்படுகிறது.
இச்சந்திப்பில் பல்கலைக்கழக பதிவாளர்  பகிரதன் மற்றும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உள்ளிட்டோர்  கலந்துகொண்டு கருத்துத்தெரிவித்தனர்.
இடைக்கால செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி                  அசங்க குணவர்தன தலைமையிலான இக்குழுவினர் உண்மையைக்கண்டறியும் குழுவின் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளித்தனர்.
கடந்தகாலங்களில் இதுபோன்ற பல ஆணைக்குழுக்கள் அரசாங்கங்களினால் நியமிக்கப்பட்டு தகவல்களைத் திரட்டியபோதிலும்                        அவை எதுவுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை.                   இதனால் ஆணைக்குழுக்களில் பொதுமக்கள் நம்பிக்கை இழந்த நிலையில் இருப்பதாக பல்கலைக்கழக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
குறிப்பாக நீண்டகால போரினால் ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பாக       பொதுமக்கள் பல்வேறு தரப்பினரிடம் முறையீடு செய்திருந்தனர்.            ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் இத்தகவல்களைத் திரட்டி           ஒப்படைத்த போதிலும் அவ்வாறான அறிக்கைகள்                            கிடப்பில் போடப்பட்டுள்ளதனால் பொதுமக்கள் விரக்தியடைந்துள்ளதாகவும் பல்கலைக்கழக அதிகாரிகள் கூறினர்.
உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான                 இடைக்கால செயலகத்தின் அதிகாரிகள் குழு                         இக்கருத்துக்களை ஏற்றுக்கொண்டதுடன் தமது பதில்களையும் தெரிவித்தனர்.