(வாஸ் கூஞ்ஞ) மன்னார் மாவட்டத்தில் பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்கள் தங்கள் கைத்தொழில் பயிற்சிகளில் ஈடுபட கட்டிடம் இல்லாமையால் தேசிய பயிலுனர் கைத்தொழில் அதிகார சபையினால் வழங்கப்படும் பயிற்சிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் (29) மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு கூட்டம் இதன் இணைத் தலைவர் இராஜாங்க அமைச்சர் கே.காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றபோது
மன்னாரில் இயங்கி கொண்டிருந்த தேசிய பயிலுனர் அதிகார சபைக்கு (நையிற்றா) பொருத்தமான கட்டிடம் ஒன்று இல்லாமை தொடர்பாக மன்னார் ஒருங்கிணைப்புகுழுக் கூட்டத்தில் விவாதத்திற்கு எடுக்கப்பட்டது.
ஏற்கனவே ஒருங்கிணைப்புகுழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக தற்காலிகமாக இயங்குவதற்காக கைத்தொழில் அமைச்சிற்கு சொந்தமான கட்ட்டத்தினை பயன்படுத்துவதற்கான அனுமதியை கைத்தொழில் அமைச்சின் செயலாளிடம் பெறுவதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்வதெனவும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதற்கமைய கைத்தொழில் அமைச்சிற்கு கோரிக்கைக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கடந்த வாரம் (29) நடைபெற்ற ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டு தொடக்கம் மன்னாரில் ஒரு வாடகை கட்டிடத்தில் இயங்கிக் கொண்டிருந்த தேசிய பயிலுனர் கைத்தொழில் அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட்டு வந்த பயிற்சியானது தற்பொழுது அக்கட்டிடம் உரியவர்களால் மீளப்பெற்றுள்ளது.
இதனால் தற்பொழுது இவ் பயிற்சியானது மன்னாரில் இடைநிறுத்தப்பட்டு இது வவுனியாவுக்கு இடம்மாற்றப்பட்டுள்ளது.
இதனால் மன்னார் மாணவர்கள் பல சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
வருடந்தோறும் இதன் பயிற்சி நிலையம் மன்னாரில் இயங்கி வந்தபொழுது வருடந்தோறும் சராசரி 200 மாணவர்கள் நன்மை அடைந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இவ்வருடம் 100 மாணவர்களே தேசிய பயிலுனர் கைத்தொழில் அதிகார சபையினால் வழங்கப்படும் பயிற்சிகளுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் நடைபெற்ற மன்னார் ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
ஆகவே மன்னாரில் இதற்கான கட்டிடம் விரைவில் தெரிவு செய்யப்பட்டு இது தொடர்ந்து இயங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும்
பாடசாலையை விட்டு விலகிச் செல்லும் மாணவர்களுக்கு மன்னார் மாவட்ட கல்வி திணைக்களமும் , அதிபர்களும் அவர்களுக்கு இவ்வாறான பயிற்சி நிலையங்களில் கைத்தொழில் பயிற்சியில் ஈடுபடுவதற்கான வழிகாட்டல்களை வழங்க வேண்டும் எனவும் இக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.