ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாஸ்ரித திசேரா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து அவரது வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இன்று(04) இணைந்து கொண்டார்.
அத்துடன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாஸ்ரித திசேரா அவர்களை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் நாத்தண்டிய தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளராகவும் இன்று நியமித்தார்.
1970 முதல் 1977 வரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த,பிரபல அரசியல்வாதியான,நாத்தாண்டிய தேர்தல் தொகுதியின் அமைப்பாளராகவும் இருந்த புரோட்டஸ் திசேராவின் புதல்வரான இவர், நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரி மற்றும் கண்டி புனித அந்தோணியார் கல்லூரி ஆகியவற்றில் பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்த பின்னர்,உயர் கல்விக்காக அவுஸ்திரேலியா சென்றார்.
உயர் கல்வியைத் தொடர்ந்ததன் பின்னர் தனது தந்தையின் வழியில் 1988 ஆம் ஆண்டு பொதுஜன பெரமுனவில் இணைந்து வடமேல் மாகாண சபைக்கு தெரிவானார்.பின்னர் 2000 ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணியில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.2004 ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கத்தில் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் பிரதி அமைச்சராகவும், 2007 இல் திறன்கள் மேம்பாடு மற்றும் தொழில் பயிற்சிக்கான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக பதவி வகித்தார்.
2010 தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு,அவர் பொது வளங்கள் மற்றும் தொழில்துறை மேம்பாட்டுக்கான அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
அவர் அமைச்சராக பதவி வகித்த காலங்களில் இளைஞர்களுக்காகவும்,வடக்கு கிழக்கின் அபிவிருத்திக்காகவும் சிறந்த பணிகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.