மன்னார் தீவில் இரண்டாம் கட்ட காற்றாலை அமைப்பது தொடர்பாக ஜனாதிபதியை சந்திக்க தீர்மானம்.

( வாஸ் கூஞ்ஞ) மன்னார் தீவில் இரண்டாம் கட்ட காற்றாலை அமைப்பது தொடர்பாக மன்னார் மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக வன்னி பாராளுமன்ற ஆறு உறுப்பினர்களும் ஜனாதிபதியை சந்திப்பது என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை (29) மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புகுழ கூட்டம் இராஜாங்க அமைச்சரும் ஒருங்கிணைப்புகுழ கூட்ட இணைத் தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றபோது காற்றாலை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இதன்போது தெரிவிக்கப்பட்டதாவது பொதுமக்கள்  , சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள்  , அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் போன்றோரால் மன்னார் இரண்டாம் கட்ட காற்றாலை மின் திட்டதிற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுக்கும் இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகார சபைக்கும் அறிவிக்கப்பட வேண்டும் என்று கடந்த ஒருங்கிணைப்புகுழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய பொதுமக்கள் பொது அமைப்புக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைபாடுகள் யாவும் அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக இங்கு மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி மாக்கஸ் அடிகளார் தெரிவிக்கையில் கடந்த வாரம் நாங்கள் இது தொடர்பான உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியபோது இங்குள்ள பொது மக்களின் சம்மதம் இல்லாமலேயே முதலாம் கட்ட நடிவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருவதால் இரண்டாம் கட்டத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று அவர்களிடம் வலியுறுத்தியுள்ளோம்.

மக்களின் சம்மதம் இன்றி மேற்கொள்ளப்பட்ட செயல்பாட்டுக்கு அவர்கள் மன்னிப்பும் கோரினார்கள் எனத் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் வினோதநோகராதலிங்கம் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் இதுதொடர்பாக மேல்மட்டத்துடன் அரச அதிகாரிகள் தொடர்பு கொள்ளும்போது இங்குள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கும் பிரதான பொது அமைப்புகளுக்கும் தெரியப்படுத்துவது நலம் என தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் மாவட்ட அபிவிருத்திகுழுக் கூட்டத்தில் காணி அபகரிப்புக்கான நடவடிக்கையை நிறுத்தும்படி கடந்த கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தபோதும் இது தொடர் கதையாக இருக்கின்றது எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

காணி அமைச்சிலிருந்து காணிகளை சுவீகரிப்பு தொடர்பாக மன்னார் பிரதேச செயலகத்துக்கு அறிவித்தல் கிடைத்தமையாலேயே இது மேற்கொள்ளப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டம் அபிவிருத்திகுழுக் கூட்டத்தால் அனுமதி வழங்கப்படாத நிலையில் மந்திரி சபைத் தீர்மானத்துக்கு அமையவே இது நடைமுறைப்படுத்தப்படுவதால் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆறுபேரும் ஒன்றிணைந்து விரைவில் ஜனாதிபதியை சந்தித்து முடிவு எடுப்பதாக  தீர்மானிக்கப்பட்டதுடன்

அதுவரைக்கும் காணி அபரிப்பு அறிவித்தல் காணிகளில் ஒட்டுவதை இடை நிறுத்துவது எனவும் தீர்மானிக்க்பட்டது.