(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு நகர் பகுதியில் பிரபல போதை பொருள் வியாபாரியின் வீட்டை பொலிசார் விசேட அதிரடிப்படையின் மோப்ப நாயின் உதவியுடன் நேற்று வெள்ளிக்கிழமை (29) முற்றுகையிட்டு சோதனையின் போது அண்ணாச்சி என அழைக்கப்படும் பிரபல பெண் வியாபாரி ஒருவர் உட்பட 3 பேரை ஜஸ் போதை பொருளுடனும்; நகரில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய 8 பேர் உட்பட 11 பேரை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
மட்டு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜி.எம்.பி.ஆர் பண்டார தலைமையிலான பொலிசார் விசேட அதிரடிப்படையினர் சம்பவதினமான இன்று பகல் மத்தியஸ்தர் வீதியிலுள்ள பிரபல பெண் போதை பொருள் வியாபாரியின் வீட்டை முற்றுகையிட்டனர் .
இதன் போது வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அண்ணாச்சி என அழைக்கப்படும் பெண் வியாபாரியை கைது செய்ததுடன் ஜஸ் போதை பொருளையும் மீட்டனர்.
இதனை தொடர்ந்து மத்திய பஸ்தரிப்பு நிலையம் தனியார் பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் திடீர் சோதனை நடவடிக்கையின் போது இருவரை ஜஸ் போதை பொருளுடன் கைது செய்ததுடன் அந்த பகுதியில் சந்கேத்த்துக்கு இடமாக நடமாடிய 8 பேர் உட்பட 11 பேரை கைது செய்தனர்
அதேவேளை வியாழக்கிழமை இரவு திரவீரசிங்கம் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று அதில் போதை பொருள் வியாபாரம் மற்றும் பெண்கள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த 19 வயது இளைஞன் ஒருவரை பொதுமக்கள் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்ததுடன் அவரிடமிருந்து ஜஸ் போதை பொருள் 3 மோட்டர்சைக்கிள் என்பற்றை மீட்டனர்.
இந்த சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.