மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஆ. நவேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மாவட்ட பிராந்திய பிரதி சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் ஆர். நவலோஜிதன் டெங்குப் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை வழங்கினார்.
இதன்போது நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்களை அடையாளம் காணுதல், அவற்றை துப்பரவு செய்து நிலைபேறானதாக தொடர்ந்து அவ்விடங்களை நுளம்புப் பரவலில் இருந்து பாதுகாத்தல், அதற்காக எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பன தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன் பிராந்திய தொற்றுநோயியலாளர் வைத்தியர் கார்த்திகா டெங்கு நுளம்புப் பரவலில் மாவட்டத்தின் நிலைப்பாடு தொடர்பாகத் தெளிவுபடுத்தினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் டிசம்பர் மாதத்தில் ஏறாவூர் நகர் மற்றும் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவு டெங்குத் தாக்கம் அதிகமாகக் காணப்படுவதுடன் மட்டக்களப்பு நகர், களுவாஞ்சிகுடி மற்றும் வாழைச்சேனை பொதுச் சுகாதார வைத்தியர் பிரிவுகளிலும் காத்தான்குடியிலும் இதன் தாக்கம் தொடர்ந்தும் காணப்படுகின்றது.
ஏறாவூர் நகரில் வெற்றுக் காணிகள் மற்றும் மூடப்பட்டு ஆள் நடமாட்டமற்ற வீடுகள் அதிகம் காணப்படுவதாகவும் அவற்றின் உரிமையாளர்கள் வெளிநாடுகளில் வசிப்பதால் பராமரிப்பின்றிக் காணப்படுகின்றன. இவை டெங்கு நுளம்புகளின் உருவாக்கத்திற்கு சாதகமாகக் காணப்படுவதாகவும் அது குறித்து கவனம் செலுத்துமாறும் அறிவுரை வழங்கப்பட்டது.
வவுணதீவு மற்றும் வாகரைப் பிரதேசங்கள் டெங்குத் பாதிப்பு மிகவும் குறைந்த இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபைகளின் செயலாளர்கள், பொதுச் சுகாதார வைத்தியர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், மாவட்ட செயலகம், வலயக் கல்வி அலுவலகங்களின் அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.