அவுஸ்திரேலிய தலைநகர் கன்பராவில்
கலாசூரி இ.சிவகுருநாதனின் ஊடக பணியை கௌரவிக்கும் முகமாக ‘இலங்கை இதழியலில் சிவகுருநாதன்’ எனும் நூல் வெளியிடப்படவுள்ளது.
தினகரன் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் கலாசூரி இ.
சிவகுருநாதனின் இருபதாம் ஆண்டு நினைவு நூலான “இலங்கை இதழியலில் சிவகுருநாதன்” வெளியீட்டு விழா எதிர்வரும் 20.01.2024 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு அவுஸ்திரேலிய தலைநகர் கன்பராவில் நடைபெறவுள்ளது.
கன்பராவில் உள்ள தமிழ் மூத்த பிரஜைகள் சங்க மண்டபத்தில் (Tamil Senior Citizen Hall,11 Bromby Street, Isaacs ACT 2607) சட்டத்தரணி,இலக்கிய ஆர்வலர், எழுத்தாளருமான திரு. க. திருவருள் வள்ளல் தலைமையில் நடைபெறவுள்ளது.
தமிழ் மக்களின் அபிமானத்தைப் பெற்ற முன்னாள் தினகரன் ஆசிரியர் கலாசூரி இ.சிவகுருநாதன் இலங்கை இலக்கியப் பரப்பிலும், ஊடகத்துறையிலும்
தனக்கெனப் பல முத்திரைகளைப் பதித்துக் கொண்டவர்.
தினகரன் பத்திரிகையில் நீண்ட காலம் பிரதம ஆசிரியராக பணியாற்றிய, கலாசூரி இ.சிவகுருநாதன் மிக இலகுவான மொழியில் எல்லோருக்கும் புரியக்கூடிய வகையில் கருத்துக்களை சொல்வதில் அவருக்கு நிகர் அவரே.
இந்நிகழ்வில் மூத்த எழுத்தாளர் லெ.முருகபூபதி நூலை அறிமுகம் செய்து சிறப்புரை வழங்குவார். அதன்பின் திரு. நிமலன் கார்த்திகேயன், இலங்கை பத்திரிகையியலில் வரலாற்றுச் சாதனை படைத்த இரத்தினதுரை சிவகுருநாதனை பற்றிய சிறப்புரை நிகழ்த்துவார்.
தினகரனில் தொடங்கிய கலாசூரி சிவகுருநாதனின் ஊடகப்பணி மற்றும் இலக்கியப்பணி இன்று வரை அவரை எவராலும் மறக்க முடியாத ஆளுமை உள்ளவராக நிலை நிறுத்தியது அவரின் வாழ்வியல் சாதனையாகும். அவரின் இருபதாம் ஆண்டு நினைவாக “இலங்கை இதழியலில் சிவகுருநாதன்” எனும் நூலின் தொகுப்பாசிரியர் திரு.ஐங்கரன் விக்கினேஸ்வரா நூலின் ஏற்புரையை வழங்குவார்.
இதன் பின் இந்த நிகழ்வுகளை ஒழுங்கமைத்து, தொகுத்து வழங்கும் சின்னத்துரை மயூரன் அவர்களின் நன்றியுரையுடன் இறுதியாக விழா நிறைவு பெறும்.
இலங்கை பத்திரிகையியலில் வரலாற்றுச் சாதனை படைத்த இரத்தினதுரை சிவகுருநாதன் அவர்களின் இருபதாம் ஆண்டு நினைவாக “இலங்கை இதழியலில் சிவகுருநாதன்” எனும் நூல்
வெளியாகி உள்ளது.
தினகரனில் தொடங்கிய கலாசூரி சிவகுருநாதனின் ஊடகப்பணி மற்றும் இலக்கியப்பணி இன்று வரை எவராலும் மறக்க முடியாத ஆளுமை உள்ளவராக தொடர்கின்றது என்பது அவரின் வாழ்வியல் சாதனையாகும். அவரின் இருபதாம் ஆண்டு நினைவாக (08/08/2003) “இலங்கை இதழியலில் சிவகுருநாதன்” எனும் நூலை ‘ஐங்கரன் விக்கினேஸ்வரா’ தொகுத்துள்ளார்.
மூன்று பாகங்களாக வெளிவரும்
“இலங்கை இதழியலில் சிவகுருநாதன்” நூலில் தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தையும், பண்பாட்டு விழுமியங்களையும் பேணிப் பாதுகாத்த கலாசூரி சிவகுருநாதன் ஆற்றிய பெருங்கடமையை ஊடக, இலக்கிய அறிஞர்களின் திறனாய்வு கட்டுரைகள் அலங்கரிக்கின்றன.
இந்நூலின் முதல் அங்கம்
‘ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்குக் களம் தந்த தினகரன் சிவகுருநாதன்’ எனும் பகுதி அவரைப் பற்றிய
வரலாற்றுப் பதிவுகளும், திறனாய்வு ஆக்கங்களை பல ஊடக ஆளுமையாளர்கள் எழுதியுள்ளனர்.
இரண்டாம் அங்கம் “பத்திரிகை ஆசிரியர்களுள் – மக்கள் திலகம்” எனும் பகுதியாக அவரைப் பற்றிய அரசியல் வல்லுநர்களின்
அஞ்சலிகளும், ஆராதனைகளும் இடம் பெற்றுள்ளது.
இந்நூலில் “பூமாலைக்கு ஏன் பாமாலை” எனும் மூன்றாம் பகுதியில் கவிதைகளில் தெரிந்த சிவகுருநாதன் சிந்தனைகளை பல கவிஞர்கள் வடித்துள்ளனர். தினகரனில் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் கலாசூரி சிவகுருநாதன் பல இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் முன்னின்றதற்கு சாட்சியமாக இக்கவிதைகள் உள்ளன.