கல்முனையில் சுகாதார அதிகாரிகளுக்கு கௌரவிப்பு.

(ஆதம்)

சுகாதார பராமரிப்பின் தரமும் பாதுகாப்பும் குறித்தான மதிப்பீடுகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட கல்முனை பிராந்திய சுகாதார நிறுவனங்கள் மற்றும் நிறுவனத்தலைவர்கள் சுகாதார அதிகாரிகளினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிராந்திய தர முகாமைத்துவ பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி ஏ.எம்.ஹில்மியினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருது வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (23) பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகிலா இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டீ.ஜி.எம்.கொஸ்டா பிரதம அதிதியாகவும், அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் எஸ்.ரீ.ஏ.பிரசங்க சேரசிங்க கௌரவ அதிதியாகவும், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ.எல்.எப்.ரஹ்மான், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ரீ.எஸ்.ஆர்.ரீ.ஆர்.ரஜாப் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் சம்மாந்துறை, நிந்தவூர், திருக்கோவில் மற்றும் பொத்துவில் ஆதார வைத்தியசாலைகளின் வைத்திய அத்தியட்சகர்கள், கல்முனை பிராந்திய பிரிவுத் தலைவர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பிரதேச வைத்தியசாலைகளின் பொறுப்பு வைத்திய அதிகாரிகள், ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவுகளின் பொறுப்பு வைத்தியர்கள், சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

சுகாதார அமைச்சின் சுகாதார பராமரிப்பின் தரமும் பாதுகாப்பும் குறித்த பணிப்பாளர் அலுவலகத்தினால் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள சுகாதார நிறுவனங்களிடையே மேற்கொள்ளப்பட்ட சுகாதார சேவையில் முன்மாதிரியான நடைமுறைகளுக்கான தர மதிப்பீட்டின் அடிப்படையில் பாலமுனை உளநல இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் முதலாமிடத்தினையும், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை இரண்டாம், மூன்றாமிடங்களையும் பெற்றுக்கொண்டது.

சகல மதிப்பீடுகளின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்டு முதல் மூன்று இடங்களைப்பெற்ற சுகாதார நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், ஏனைய நிறுவனங்களின் சிறந்த செயற்பாடுகளையும் பாராட்டி பாராட்டுச் சான்றுதழ்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.