கர்ப்ப காலத்தில் பப்பாளி.

வைத்தியர் சுஜிதா சுதர்சன் (பயிலுனர் மருத்துவ போசணைப் பிரிவு)

ஒரு பெண் கருத்தரித்த காலத்தில் இருந்து அவள் குழந்தையை பிரசவிக்கும் வரையான காலப்பகுதி கர்ப்பகாலம் என வரையறுக்கப்படுகிறது. இதனால் இக்காலப்பகுதி பெண்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. குறித்த காலப்பகுதியில் தாயினதும், சிசுவினதும் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு ஊட்டச் சத்து மிகுந்த பழங்கள், காய்கறி, இலைக்கறி வகைகள் உள்ளடக்கிய உணவுகளை உணவு வேளைகளில் உள்ளடக்கிக் கொள்ளல் வேண்டும். இருந்த போதிலும் கர்ப்பவதிகள் குறித்த காலப்பகுதியில் சேர்த்துக் கொள்ள வேண்டிய மற்றும் தவிர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள் தொடர்பாக அதீத கவனம் செலுத்துவது வழமையானதொன்றேயாகும். இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளில் கர்ப்பிணிகளினால் பாரம்பரியமாக தவிர்க்கப்படும் உணவுகளில் பப்பாளி முதலிடம் வகிக்கிறது

இதனை உட்கொள்வதனால் கருச்சிதைவு ஏற்படக்கூடும் என்ற தவறான நம்பிக்கையே இதற்கு காரணமாகிறது. இது ஏன் தவறான நம்பிக்கை என்று இக்கட்டுரையில் சற்று அறிவியல் ரீதியாக நோக்குவோம். பப்பாளியானது லட்டக்ஸ் (Latex) எனும் பதார்த்தத்தை குறிப்பிட்ட அளவில் கொண்டுள்ளது. இது பிரதானமாக பப்பெய்ன் (Papain) மற்றும் கைமோ பப்பெய்ன் (Chymopapain) ஆகியவற்றை மூலக்கூறாக கொண்டுள்ளது. இவை கருப்பை தசைகளை தூண்டி அதிகளவான கருப்பை தசை சுருக்கங்களை ஏற்படுத்தக்கூடியன. இது ஆய்வுகூட எலிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வியற்கைத் தகவமைவானது பழுக்காத பப்பாளியை விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக விருத்தியடைந்துள்ளது. இது பப்பாளி கனிந்து பழமாக மாற்றமடையும் போது அதன் உள்ளடக்கம் குறைவடைந்து புறக்கணிக்க கூடிய அளவை அடைகிறது. இதன் காரணமாக கர்ப்பவதி ஒருவர் கனிந்த பப்பாளி பழத்தை உட்கொள்வதனால் குறித்த கருவுக்கு பாதிப்பு ஏற்படாது.

இதேவேளையில் பப்பாளி பழமானது வருடம் முழுவதும் மலிவான விலையில் எளிதில் பெறக்கூடிய ஊட்டச்சத்து மிக்க ஒரு பழமாகும். 100 கிராம் பப்பாளி பழத்தில் 26 கிலோகலோரி சக்தியும், 90 கிராம் நீர்ச்சத்தும், 5 கிராம் மாப்பொருளும், 3 கிராம் நார்ச்சத்தும் செறிந்து காணப்படுகிறது. மேலும் அதிகளவில் விற்றமின் A, விற்றமின் C, போலிக்கமிலம், பொட்டாசியம், கல்சியம், மக்னீசியம் ஆகிய கனியுப்புக்களையும் கொண்டு காணப்படுகிறது. குறிப்பிட்டளவு போலிக்கமிலம் இதில் காணப்படுவதன் காரணமாக கர்பகாலத்தில் சிசுவின் மூளை மற்றும் முண்ணான் விருத்திக்கு உதவுகிறது. மேலும் பப்பாளிப் பழத்தில் அதிகளவு நார்ச்சத்து காணப்படுவதால் கர்ப்பகாலத்தில் ஏற்படக்கூடிய மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது

இதில் காணப்படும் பொட்டாசியம் உடலின் குருதியமுக்கத்தை சீரான அளவில் பேண உதவுகிறது. இதன் விற்றமின் A உள்ளடக்கமானது உடலின் நிர்ப்பீடன தொகுதிக்கு வலுவூட்டுகிறது. இதனால் தாய்க்கும், சிசுவுக்கும் நோய்களில் இருந்தான பாதுகாப்பு உறுதிசெய்யப்படுகிறது. இருந்த போதிலும் பப்பாளிப் பழத்திற்கு ஒவ்வாமையுடைய நபர்கள் இதை உட்கொள்வதை தவிர்த்துக்கொள்ளல் வேண்டும். எமது நாட்டில் நிறைக்குறைவுடைய மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுடைய கர்ப்பவதிகளின் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்வாக காணப்படுகின்றது. எனவே எப்போதும் இலகுவில், குறைந்த விலையில் கிடைக்க கூடிய ஊட்டச் சத்துக்கள் நிறைந்த பப்பாளிப் பழம் எமது பிரதேசத்துக்கான ஓர் வரப்பிரசாதமே. ஆகவே பழைய மூடநம்பிக்கைகளை கருத்திற்கொண்டு கனிந்த ஒர் துண்டு பப்பாளிப் பழத்தைத் தவிர்ப்பது ஓர் புத்திசாலித்தனமான தெரிவாக அமையாது

வைத்தியர் சுஜிதா சுதர்சன்

பயிலுனர் மருத்துவ போசணைப் பிரிவு