திருவெம்பாவையும் மார்கழி மகத்துவமும்.

இந்துக்களின்  திருப்பள்ளி எழுச்சி, திருவெம்பாவை விரதம் மற்றும் ஊர்வலம்  இன்று(28) புதன்கிழமை அதிகாலை ஆரம்பமாகின்றது.
சிவனை நினைந்து வழிபடும் இவ்விரதம்   இன்று 28.12.2022ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை ஆரம்பமாகின்றது.  தொடர்ந்து 10தினங்கள்  திருவெம்பாவை விரதம் மற்றும் ஊர்வல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இறுதியில் பத்தாம் நாள் ( 06.01.2023) வெள்ளிக்கிழமை திருவாதிரை தீர்த்தோற்சவத்துடன் திருவெம்பாவை நோன்பு நிறைவடைகிறது.
இக்காலகட்டத்தில்   பிரம்ம முகூர்த்த வேளையாம் அதிகாலை 4-6 மணி வேளையில் ஆலய வழிபாட்டில் ஈடுபடுவதுடன், இவ் ஊர்வலத்திலும் கலந்து கொண்டு எல்லாம் வல்ல நடராஜப் பெருமானின் அருளைப் பெறுவது இந்துக்களின் வழமையான செயற்பாடாகும்.
 நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். தை மாதம் தொடங்கி ஆனி வரை அவர்களுக்குப் பகல் பொழுதாகவும், ஆடி மாதம் முதல் மார்கழி வரை  இரவுப்பொழுதாகவும்  அமையும்.
அப்படிப் பார்க்கும்போது அதிகாலையான பிரம்ம முகூர்த்தம் மார்கழியில்தான் வருகிறது. தேவர்களுக்கே பிரம்ம முகூர்த்தமாக இருக்கிறபடியால், மார்கழி மாதம் மானிடர்களுக்கும் சிறந்ததாகிறது.
மாதங்களில் நான் மார்கழி என்று பகவான் மகாவிஷ்ணு கூறியுள்ளார். மார்கழி மாதம் தனுர் மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் தனுசு ராசியில் குருவின் வீட்டில் சூரியன் குடியேறுகிறார்.
அப்படி சிறப்புகள் நிறைந்த மார்கழி மாதத்தில் அதிகாலையில் குளித்து விட்டு பாவை நோன்பு இருந்ததால் மனதிற்கு பிடித்த கண்ணுக்கு நிறைந்த கணவன் கிடைப்பார் என்பது நம்பிக்கை.
மகத்துவம் நிறைந்த மார்கழியில் உலக நாட்டங்களைக் குறைத்து, இறைவனிடமும் அவர் திருவடி சார்ந்த செயல்பாடுகளிலுமே மனம் ஒன்ற வேண்டும் என்பதற்காகத்தான் வேறெந்த நிகழ்வுகளையும் நடக்காமல் பார்த்துக் கொண்டார்கள். அதன் வழியொட்டியே மார்கழியில் சுப நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதே நேரம் இறைவனிடம் மனம் லயிக்க வேண்டும் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்’.
மார்கழியில் அதிகாலை எழுந்து குளித்து விட்டு வாசல் தெளிப்பதும் மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் புத்துணர்ச்சி தரும். சூரியனிடம் இருந்து வருகிற ஓசோனின் தாக்கம் மார்கழி அதிகாலையில் அதிகமாக இருக்கும். இதனால் அதிகாலையில் வெளியே வருவதால் அந்தக் காற்றும், கதிரும் உடலை வலிமைப்படுத்தும் என்பதால்தான் அதிகாலை குளியலை முன்னோர்கள் அறிமுகம் செய்திருக்கிறார்கள்.
 பெண்கள் அதிகாலையில் நீராடி பாவை நோன்பு நோற்று பெருமாளை வணங்கி திருப்பாவை பாடுகின்றனர். அந்த கண்ணனே தங்களுக்கு கணவனாக வரவேண்டும் என்பது பல பெண்களின் கனவாக உள்ளது. அனுமன் ஜெயந்தி வருவதும் இந்த மார்கழியில்தான்.
இவ்வளவு சிறப்புவாய்ந்த மார்கழியில் விடியற்காலம் விஷ்ணுசகஸ்ரநாமம் படிப்பது மற்றும் திருப்பாவை படிக்க இறைவன் அருள் கிடைக்கும்.
 திருவெம்பாவை
மார்கழி மாதத்தில்தான் வருகிறது. சிவனுக்கு உகந்த திருவாதிரை திருவிழா வருகிறது. சிவபெருமானின் பக்தைகள் நோன்பு நோற்பதற்காகத் தோழியை எழுப்பச் செல்லும் காட்சி திருவெம்பாவையிலும் வருகிறது. சிவனுடைய அடியார்களே கணவனாக வர வேண்டும், அவனோடு சேர்ந்து சிவனைத் தொழ வேண்டும் என்பதே திருவெம்பாவையில் வருகிற பாவை நோன்பின் நோக்கம்.
மார்கழி மாண்பு.
மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வாசலில் கோலமிடுவது தொன்றுதொட்டு நடந்துவருகிறது. மாட்டுச்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபடுவதும் நடக்கும். மாட்டுச்சாண உருண்டையில் பூசணிப்பூவை செருகி, கோலத்துக்கு நடுவே வைப்பது மார்கழி முழுக்கவே நடைபெறும். சில வீடுகளில் அந்தப் பூ உருண்டையை வரட்டியாகத் தட்டி சேகரித்து சிறுவீட்டு பொங்கலன்று ஆற்றில் விடுவார்கள்.
கல்யாணம் கை கூடும்
அக்காலத்தில், திருமணத் தரகர்களோ, மாப்பிள்ளை – பெண் தேவை என்பதற்காக வெளியிடப்படும் கல்யாண விளம்பரங்களோ கிடையாது. எந்த வீட்டில் பெண் அல்லது பிள்ளை திருமணத்துக்குத் தயாராக இருக்கிறார்களோ, அந்த வீட்டின் வாயிலில் மட்டும் கோலத்தின் மேல் பூசணிப் பூ வைப்பார்கள். ஒட்டு மொத்தமாக எல்லா வீடுகளிலும் வைக்க மாட்டார்கள். மார்கழி மாத அதிகாலையில் வீதி பஜனையில் வருபவர்களின் பார்வையில் இந்தப் பூக்கள் தென்படும். விவரத்தைப் புரிந்து கொள்வார்கள். தை மாதம் பிறந்த உடனே பேசி, கல்யாணத்தை முடிப்பார்கள். இதன் காரணமாகவே மார்கழி மாதத்தில் வீட்டு வாயிலில் இருக்கும் கோலத்தில் பூக்களை வைத்தார்கள்.
மார்கழி மகத்துவம்.
அதுபோலவே மார்கழி மாதத்தில் பல புராதன நிகழ்வுகளும் நடந்துள்ளன. மகாபாரத யுத்தம் மார்கழி மாதத்தில் நடைபெற்றதாக இதிகாசம் கூறுகிறது. திருப்பாற்கடல் கடையப்பட்டபோது, முதலில் விஷம் எழுந்ததும், சிவன் அதனை உண்டு உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியதும் இதே மார்கழி மாதத்தில்தான். இந்திரனால் பெரு மழை வெள்ளம் உருவாக்கப்பட்டு கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டபோது, கோவர்த்தனகிரி மலையை, கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியதும் இந்த மார்கழி மாதத்தில்தான். பகவத்கீதை பிறந்ததும் இந்த மாதத்தில்தான்.
சூடிக்கொடுத்த சுடர்கொடியாளின் மாதம் இது. ஆண்டாளின் பாசுரங்களை தியானித்து பலனை அடைவோம் வாருங்கள்.
விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா