சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ. காதர் காலமானார்.

(அஸ்லம் மெளலானா)  கிழக்கின் சிரேஷ்ட ஊடகவியலாளரும் இலக்கியவாதியுமான கலாபூசணம் பி.எம்.எம்.ஏ.காதர், தனது 66 ஆவது வயதில் திங்கட்கிழமை (17) காலமானார்.

மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் கடந்த 03 தசாப்த காலமாக அனைத்து தேசிய பத்திரிகைகளினதும் பிராந்திய செய்தியாளராக மிகவும் சிறப்பாக பணியாற்றி வந்துள்ளார்.

சிறு வயது முதல் கவிதை, கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்த இவர் தினசரி மற்றும் வார இதழ்களில் செய்தி அறிக்கையிடலுக்கு மேலதிகமாக பிராந்திய மற்றும் சமூக முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு ஏராளமானமான விவரணக் கட்டுரைகளையும் விமர்சனங்களையும் எழுதி வந்துள்ளார்.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் பத்திரிகை ஆசிரியர் சங்கமும் வருடாந்தம் நடாத்தும் ஊடக விருது விழாவின் 2010 ஆம் ஆண்டுக்கான போட்டியில் சிறந்த கட்டுரையாளருக்கான சுப்ரமணிய செட்டியார் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

அவ்வாறே 2012ஆம் ஆண்டு இங்கை பத்திரிகை ஸ்தாபனமும், இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இணைந்து நடாத்திய போட்டியில் சிறந்த சூழலியல் செய்தியாளருக்கான விருதுதை வென்றார்.

2018 ஆண்டு கலாசார, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கலாபூசணம் விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட இவர் அதே வருடம் கிழக்கு மாகாண சபையின் உயர் விருதான வித்தகர் விருதையும் பெற்றிருந்தார்.