மன்னாரில் 444 குடும்பங்களைச் சேர்ந்த 1533 நபர்கள் பாதிப்பு.

( வாஸ் கூஞ்ஞ)

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையின் காரணமாகவும் அதனால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால்   இதுவரை 444 குடும்பங்களைச் சேர்ந்த 1533 நபர்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரியப்படுத்தியுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் கடந்த 15.12.2023 தொடக்கம் 17.12.2023 வரை மன்னாரில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது என மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம தெரிவித்துள்ளது.

இதன்படி மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் 216 குடும்பங்களைச் சேர்ந்த 783 பேரும்,

நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சார்ந்த நான்கு நபர்களும் ,

மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் 175 குடும்பங்களைச் சார்ந்த 627 நபர்களும் ,

மடு பிரதேச செயலகப் பிரிவில் 52 குடும்பங்களைச் சார்ந்த 119 நபர்களும் இவ் அனர்த்தத்தினால் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதில் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் 03 முகாம்களில் 131 குடும்பங்களைச் சேர்ந்த 438 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன எனவும்.

இவ்வாறு மடு பிரதேச செயலகப் பிரிவில் ஒரு முகாமில் 52 குடும்பங்களைச் சேர்ந்த 119 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் நானாட்டான் மற்றும் மாந்தை மேற்குப் பகுதியில் தலா ஒரு வீடு வீதம் பகுதியாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் மல்வத்து ஒயாவின் நீர் மட்டம் அதிகரிப்பின் காரணமாக தந்திரிமலை பகுதியில் சிறியளவிலான வெள்ளம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால் மன்னாரில் தேக்கம் மற்றும் அருவியாறு பகுதியின் தாழ்நிலங்களில் இருக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.