வெண் முதுகு தத்தி , மடிச்சுக்கட்டி தாக்கம் பரவலாக காணப்படுவதால் மன்னார் விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பணிப்பாளர் திருமதி சாகிரா பாணு

(வாஸ் கூஞ்ஞ) தற்போது வடமாகாணத்தில் புதிதாக பரவி வரும் வெண் முதுகு தத்தி தாக்கம் மற்றும் மடிச்சுக்கட்டி தாக்கம் பரவலாக காணப்படுவதால் மன்னார் விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மன்னார் மாவட்ட கமநல சேவைப் பணிப்பாளர் திருமதி சாகிரா பாணு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட கமநல சேவைப் பணிப்பாளர் திருமதி சாகிரா பாணு இது தொடர்பாக மேலும் தெரிவித்திருப்பதாவது

தற்பொழுது மழையுடன் கூடிய காலநிலையினால் நெல் வயல்களில் அதிக பீடைத்தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கின்றது.

தற்போது வடமாகாணத்தில் புதிதாக பரவி வரும் வெண் முதுகு தத்தி தாக்கம் மற்றும் இலை மடிச்சுக்கட்டி தாக்கம் பரவலாக காணப்படுகின்றது.

இப்பீடையானது ஐந்து வருடங்களிற்கு முன்பு அம்பாறை மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டு விவசாய திணைக்கள மற்றும் விவசாயிகளின் ஒன்று சேர்ந்த நடவடிக்கையினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் பெரியபண்டிவிரிச்சான் , இரணை இலுப்பைக்குளம் போன்ற பிரதேசங்களில் சுமார் 60 ஏக்கர் நிலப்பரப்பில் 30 – 40 வீதமான தாக்கம் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இப்பூச்சியானது கபில நிற தத்தியிலும் பார்க்க அதிக திறன் உள்ளதால் தாக்க அறிகுறி தெண்பட்டு இரண்டு மூன்று நாட்களிலேயே முழு வயலும் அழிந்து விடும் ஆபத்தான ஒரு நிலைமை உருவாகும்.

கபில நிற தத்தி தாக்கமானது தொட்டம் தொட்டமாக வட்ட வடிவத்தில் வயல் எரிவு காணப்படும்.

எனினும் இந்த வெண்முதுகு தத்தி தாக்கமானது தொட்டம் தொட்டமாக ஒரு குறித்த வடிவின்றி காணப்படும்.

பயிர்களின் நீர்மட்டத்துடன் தொடுகையுறும் பகுதியில் வெண்நிற சிறகுகள் நீண்ட நிறையுடலி தத்தி மற்றும் அணங்குகளை காணலாம்.

இப்படி எட்டு பத்து தத்திகள் ஒரு தாவரத்தில் காணப்படுமாயின் இரசாயண கட்டுப்பாட்டிற்கு செல்லலாம்.

இத் தத்தி தாக்கமானது மானாவாரி மற்றும் நீர்பாசன சேதடிப்பு விளை நிலங்களிலும் தொடர்ச்சியான நீருள்ள வயல்களிலும் அதிக நிழல் மற்றும் அதிக சாரீரப்பதனுள்ள வயல்களிலும் இலகுவாக தொற்றுதல் ஏற்படுத்துகின்றது.

மேலம் நெருக்கமான தாவர அடர்த்தி கூடிய அதிக நைதரசன் பசளை (யூறியா) பாவனையிலுள்ள பயிரின் ஆரம்ப வளர்ச்சிக் காலங்களில் அதிகூடிய முறையற்ற  பீடை நாசினி பாவனை என்பன இப்பீடை பெருக்கத்திற்கு ஏதுவான காரணிகளாக உள்ளன.

சிபார்சு செய்யப்படாத இரசாயணயம் தவறான முறையில் விசிறப்படும்போது நன்மை பயக்கும் பூச்சிகளான ஆமை வண்டு . தும்பி , குளவி போன்றன அளித்து விடுகின்றன.

அத்துடன் இப்பீடையினால் தாவர நஞ்சு ஒன்று சுரக்கப்படுவதாலும் அதிகளவான நைதரசன் பாவனையினால் இழையங்கள் நலிவடைவதும் தாவரத்தில் பீடை எதிப்பு சக்தி குறைவடைந்து பீடைத்தாக்கம் அதிகரிக்கும்.

இத் தத்தி தாக்கம் காணப்படும் வயல்கள் மஞ்சள் நிறமாக மாறி பின்னர் இரண்டு மூன்று நாட்களில் கபில நிறமாக எரிந்த திட்டுகளாக காணப்படும்.

பின் வயல் முழுவதும் பரவி வயல் எரிந்து விடும். பயிரின் குருத்து பகுதி மட்டும் பச்சை நிறத்தில் காணப்படும்.

இப்பூச்சியினை கட்டுப்படுத்தி வயலை மீள உருவாக்கலாம். அல்லாவிடின் எரிவிலிருந்து வயலை பாதுகாக்க முடியாது.

வயல் நீரில் பயிர்களை அசைத்து பார்த்தால் வெண்நிற தேங்காய் துறுவல் போன்று இப்பூச்சிகள் பரவலில் ஈடுபடும்.

இப்பூச்சிகள் உறிஞ்சும் துளைகளில் வெளியேறும் சுடுப்புக்கள் கறுப்பு நிற பங்கசு வளர்ச்சி காணப்படும். இதனால் தத்தி தாக்கத்தை உறுதி செய்யலாம். அத்துடன் ஒளித் தொகுப்பும் பாதிக்கப்படும்.

முற்காப்பு நடவடிக்கைகளாக பயிரினை வயலில் ஸ்தாபித்து இரண்டு கிழமைகளின் பின்னர் வயலினை தொடர்ந்து அவதானித்தல் வேண்டும்.

அனைத்து விவசாயிகளும் சிபார்சான அளவில் மட்டுமே அசேறன பசளை பாவித்தல் வேண்டும். முக்கியமாக மியூரியேட் பொட்டாசு பாவனையான விதைத்து  35 ம் நாளும் 45 ம் நாளுமாக பிரித்து இடல் கட்டாயமான செயல் முறையாகும்.

வடமாகாணத்தில் முக்கிய நெல் உற்பத்தி பிரதேசமான மன்னார் மாவட்டமானது இத்தத்தி தாக்கத்தால் பாதிக்கப்படின் நுகர்வுக்கான நெல் மட்டுமல்லாது விதை தட்டுப்பாடு ஏற்படும். வுhய்ப்புகளே உள்ளன.

எனவே இத்தாக்கத்தினை அடையாளம் கண்டவுடன் உங்கள் பிரதேச விவசாய போதனாசிரியருடன் தொடர்பு கொண்டு இப்பூச்சியிலிருந்து எமது வயலினை பாதுகாப்போம் என மன்னார் மாவட்ட கமநல சேவைப் பணிப்பாளர் திருமதி சாகிரா பாணு இவ்வாறு தெரிவித்துள்ளார்.