இந்த வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் பலமான அத்திவாரம் இன்றி கட்டப்பட்ட கட்டிடத்தில்

அலங்காரம் செய்தது போன்றதாகவே இருக்கின்றது… (பா.உ – கோ.கருணாகரம் ஜனா)
(சுமன்)

இந்த வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் பலமான அத்திவாரம் இன்றி கட்டப்பட்ட கட்டடத்தில் அலங்காரம் செய்தது போன்றதாகவே இருக்கின்றது. நல்லாட்சியும், வெளிப்படைத்தன்மையும், ஊழலற்ற நிருவாகமும் எமது நாட்டைவிட்டுச் சென்று பல தசாப்தங்களாகிவிட்டது என்பதே நமது நாட்டின் ஜதார்த்தம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

பிரான்சியப் புரட்சியையொத்த நிலைமையே இந்த வற் வரிமூலம் நீங்கள் எதிர்கொள்ளப் போகின்றீர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்ட விவாதத்தின் குழு நிலை விவாத இறுதி நாளன்று நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு தொடர்பான ஒதுக்கீட்டு விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வரவு செலவுத்திட்டம் சமர்ப்பித்த நாள் முதல் இன்றுவரை நடந்த விவாதங்களின் ஒட்டு மொத்த அறுவடை என்ன?  சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத்திட்டம் நிதி முகாமைத்துவத்தை பேணுவதற்கு ஏற்ற வகையில் அரச வருவாய்களையும் அரச செலவீனங்களையும் முறையாக எடுத்துரைத்துள்ளதா? முறையான வரவு மூலங்கள் இன்றி எதிர்பார்க்கப்படும் அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் வரவினை மதிப்பீடு செய்து அதற்கேற்றவகையில் செலவீனங்களைத் தயாரித்த வெறும் இலக்கங்களுடனும் எழுத்துக்களுடனும் கூடிய ஒரு கூற்றாகவே இந்த வரவு செலவுத்திட்டத்தை நான் காண்கின்றேன். இத்தகைய வரவு செலவுத்திட்டத்தின் மூலம் நாட்டின் நிதிக் கொள்கை, நாட்டின் பொருளாதார உறுதிப்பாடு, பொருளாதாரம் தொடர்பான தேசியக் கொள்கைகள் வலுப்படுமா? வரவுசெலவுத்திட்டத்தில் அடையக் கூடியதென எடுத்துரைக்கப்பட்ட இலக்குகளை அடைய முடியுமா? என்பதே எனது கேள்வி

வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கும் இந்த முன்மொழிவுகளை நிறைவேற்றுவதற்காக இன்று இந்தப் பாராளுமன்ற விவாதங்களின் மூலம் செலவிடும் மக்கள் வரிப்பணத்திற்கான செலவு நன்மையினை நோக்குவோமானால் அது விரும்பக்கூடியதாக இருக்குமா என்றெல்லாம் நாம் நோக்க வேண்டும்.

எமது நிதியமைச்சரின் அறிவு, திறன், புலமை தொடர்பாக எனக்கு ஐயமில்லை. எனக்கு ஏற்பட்டுள்ள ஐயம் இந்த வரவு செலவுத்திட்டம் திட்டமுன்மொழிவுகளை மேற்கொள்ளும் போது ஆய்வு செய்யும் ‘ளுஆயுசுவு’ கொள்கைக்கு ஏற்புடையதா என்பதே. அதாவது வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிட்ட விடயங்கள் தெளிவானவையா, அதாவது வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளில் கூறப்பட்ட விடயங்கள் அளவிடக் கூடியதா? இந்த முன்மொழிவுகள் அடையப்படக் கூடியதா? ஏற்புடையதானதா? என்ற கேள்விகள் எனக்குள் எழுகிறது.

வரவு மூலங்கள் முறையாகக் குறிப்பிடப்படாது வெறுமனே செலவீனங்களை எடுத்துரைக்கும் வரவு செலவுத்திட்ட விவாதம் ஒன்றின் ஊடாக நாட்டினதும் நாட்டு மக்களதும் வரிப்பணத்தை வீணாகச் செலவு செய்து கொண்டிருக்கின்றோம். இதன் மூலம் நிதி, பொருளாதார உறுதிப்பாடு ஏற்படும் என்பது வெறும் கற்பனை மாயமேயொழிய ஜதார்த்தத்தின் பாற்பட்டதல்ல. ஒரு வகையில் இது கூட ஒருவகை ஊழலின் பாற்பட்டதே.

ஊழல் என்றதும் எனக்கு ஞாபகம் வருவது. வரவுசெலவுத்திட்ட குழுநிலை விவாதங்களின் போது துறை சார்ந்த விடயங்களைப் பேசியதை விட ஊழல் தொடர்பாக பேசப்பட்டதே அதிகமாகும். குறிப்பாக அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சரொருவர் அமைச்சரவைக் கூட்டுப் பொறுப்பென்னும் வெஸ்ற்மினிஸ்ரர் பாராளுமன்றச் சம்பிரதாயங்களுக்கு மாறாக தனது அமைச்சின் ஒரு துறையில் நடந்த ஊழலை இந்த உயரிய சபையில் எடுத்துரைத்து அரச தரப்பும் எதிர்த்தரப்பும் ஒன்றிணைந்து இதற்கு எதிராகத் தீர்மானத்தினை நிறைவேற்றிய பின்பும் அந்த ஊழலை எடுத்துரைத்த அந்த அமைச்சருக்கு அந்த ஊழலே வினையாகி அவரது பதவி பறிக்கப்பட்ட சம்பவமும் நமது வெஸ்ற்மினிஸ்ரர் பாராளுமன்ற சம்பிரதாயத்தில் புது அத்தியாயத்தைத் தோற்றுவித்துள்ளது. நமது வெஸ்ற்மினிஸ்ரர் சம்பிரதாயம் கூறுவது என்ன? யாராவது ஆட்சியில் நிகழும் ஊழல்களைக் கதைத்தால் உங்களுக்கு இதுதான் நடக்குமென்று நிறைவேற்று அதிகாரம் சிவப்பு விளக்கினை ஏற்றியுள்ளது.

இன்று வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் செயற்படுத்துதல் தொடர்பாக சிந்திக்கும் முன்னர் நம் நாட்டின் நிதி பொருளாதார உறுதிப்பாடு காண்பது தொடர்பாக சவாலாக இருக்கும் விடயம் கடன் மறுசீரமைப்பு விடயமேயாகும். நமது கடன் மறுசீரமைப்பு தொடர்பாக அரச தரப்பு பெருமைகொள்கிறது. உண்மையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பாகப் பேசுவது ஒரு நாட்டின் பொருளாதார உறுதிப்பாடு தொடர்பாக பெருமைக்குரிய விடயமல்ல. பெற்ற கடனை கூறியபடி உரிய காலத்தில் செலுத்த முடியவில்லை. அதனைத் தள்ளுபடி செய்யுங்கள் அல்லது சற்றுக் காலம் தாருங்கள்.  இல்லையெனில் கடனுக்கான வட்டியினைக் குறையுங்கள். அதுவுமில்லையெனில் மீளச்செலுத்தும் காலம் தொடர்பாக மறு பரிசீலனை செய்யுங்கள் என்பதே இந்த கடன் மறுசீரமைப்பின் அடிப்படை. இது எவ்வாறு எமது நாட்டுக்குப் பெருமையாகும்.

அரசாங்கம் மேற்கொள்ளும் கடன் மறுசீரமைப்பு தொடர்பான சகல நடவடிக்கைகளும், சகல தீர்மானங்களும் கடன் வழங்கிய நாடுகள் கடன் வழங்கிய சர்வதேச கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் எடுத்துரைத்த நிபந்தனைகள் யாவும் வெளிப்படைத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். நமது நாட்டின் பாராளுமன்றமே நிதி அதிகாரத்தின் உச்சபீடம், நிறைவேற்று அதிகாரம் நிதியதிகாரத்தை பிரயோகிக்க முடியாது. அப்படியெனில் நமது கடன் மறுசீரமைப்பு தொடர்பான சகல விடயங்களும் நாட்டின் நிதிவிவகாரம் தொடர்பில் உச்ச அதிகாரம் கொண்ட பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பாக கடன் வழங்கும் நாடுகள் தொடர்பான அமைப்பான பாரிஸ் கிளப் நமக்குப் போதிய கால அவகாசத்தை வழங்கியுள்ளது.  வேண்டுமானால் சற்று மூச்சு விடலாம். பாரிஸ் கிளப் தமது கடன் வழங்கும் கொள்கை தொடர்பாக தனது வெளிப்படைத் தன்மையினைக் காட்டியுள்ளது.

கடன் மறுசீரமைப்பு தொடர்பாக எமது பிரதான கடன் வழங்கும் நாடுகள் கூட நமக்குச் சாதகமான முடிவைத் தந்தாலும் அவர்கள் நமக்குக் கூறும் நிபந்தனைகள் என்ன? நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை, ஊழலற்ற நிருவாகச் செயற்பாடு என்பனவே அவர்கள் கூறும் நிபந்தனைகளாகும். நல்லாட்சியும், வெளிப்படைத்தன்மையும், ஊழலற்ற நிருவாகமும் எமது நாட்டைவிட்டுச் சென்று பல தசாப்தங்களாகிவிட்டது என்பதுவே நமது நாட்டின் ஜதார்த்தம்.

எமது நாட்டில் நல்லாட்சி நிலவுகின்றதா? வெளிப்படைத் தன்மை நிலவுகின்றதா? ஊழலற்ற நிருவாகம் இருக்கின்றதா? இந்த உயரிய சபையில் அமர்ந்திருக்கும் ஒவ்வொருவரும் உங்கள் மனச்சாட்சியிடம் இந்தக் கேள்வியினைக் கேளுங்கள். சீன எக்சின் வங்கி எமக்கு உதவுகின்றது. கடன் மறுசீரமைப்பில் கைகொடுக்கின்றது சீன கடன் மறுசீரமைப்பு தொடர்பான வரையறைகள் என்ன? இதனை இந்த உயரிய சபையில் சமர்ப்பிக்க வேண்டியது அரசின் தார்மீகப் பொறுப்பு. அது மாத்திரமல்ல கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சீனாவின் கொள்கைகள் தொடர்பாக அரசு வெளிப்படைத் தன்மையுள்ளதாக நடந்துகொள்ள வேண்டும்.

நாம் சீனா தொடர்பாக உரையாற்றும் போது இந்தியா தொடர்பாக உரையாற்ற வேண்டியதும் கட்டாயமாகும். இந்தியா என்று நாங்கள் பேசினால் இங்குள்ள சிலருக்கு அது கசக்கும். இந்தியா எனக்கொன்றும் இனிப்பல்ல. ஆனால், ஜதார்த்தம் புரியவேண்டியது அவசியம்.

பொருளாதாரச் சிக்கலில் நாம் மூழ்கியிருந்த வேளை வங்காள தேசத்திடமே கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்த நிலை இந்த வேளையில் எமக்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை அத்தியாவசிய மருந்து எரிபொருள் போன்ற விடயங்களுக்காக எந்தவொரு நிபந்தனையுமின்றி வழங்கியது. அந்த வேளையில் சர்வதேச நாணய நிதியம் கூட 2.9 பில்லியன் டொலர்களை பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையிலேயே வழங்கியது.

நான் ஒன்றும் இந்திய ஆதரவுத் தளத்தில் நின்று உரையாற்றவில்லை. ஆபத்தில் கைகொடுப்பவனே தோழன் ஆபத்தில் உதவுவது போல தனது நலன்களை நிறைவேற்ற நினைப்பவன் உண்மையான நண்பனல்ல. இந்திய சீன உறவு தொடர்பாக இலங்கை கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இது. நமது நாட்டுக்கு மிகக் கிட்டிய தூரத்திலிருக்கும். அண்டை நாடான இந்தியாவை உதட்டளவில் புகழ்ந்து உள்ளத்தின் ஊடாக சீண்டுவதை நாம் தவிர்க்க வேண்டும். நமது கடன் மறுசீரமைப்பு தொடர்பாக உற்ற நண்பனாக விளங்குவது இந்தியாவே.

அண்மைக்காலமாக நமது வெளியுறவுக் கொள்கைகளிலும் பாரிய மாற்றங்களினை நாம் அவதானிக்கின்றோம். இது நமது தேசியக் கொள்கைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். அண்மைக்காலங்களில் சீனப் பாதுகாப்புத் துறை தொடர்பான உளவுக் கப்பல்கள் இந்து சமுத்திரத்தில் சஞ்சரிப்பதும் நமது துறைமுகங்களில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக வருகை தருவதாகக் கூறுவதும் அவற்றுக்கு நமது நாடு செங்கம்பளம் விரித்து வரவேற்பதும் வழமையான நிகழ்வாக இடம்பெறுகிறது. எமது வெளிநாட்டுக் கொள்கை சீனாவுடன் எதிர்ப்பாக இருக்க வேண்டும் என்பதல்ல எனது உரையின் சாராம்சம் நமது சீன சார்பென்பது இந்து சமுத்திரத்தின் தென்னாசிய நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதற்கு நமது நாடு காரணமாகிவிடக்கூடாது என்பதற்காகவே நான் இவ்வாறு கூறுகின்றேன்.

இந்தியா சீனாவை விட எமது நட்பு நாடு இந்நாட்டில் வாழும் பௌத்த, இந்து மக்களின் ஆணிவேரின் மூலம் இந்தியாவே கலாசார பாரம்பரிய தொடர்புகள் மாத்திரமல்ல இந்நாட்டில் நீங்கள் பெருமை கொள்ளும் பௌத்தம் மதம் தோன்றியதும் பாளி மொழி தோன்றியதும் இந்தியாவில்தான். பௌத்த மதம் தொடர்பாக நீங்கள் விதந்து போற்றும் பௌத்த இலக்கியங்கள் தோற்றம் பெற்றதும் இந்தியாவில்தான். இத்தகைய வரலாற்றுத் தொடர்பை சீனாவுக்காக அறுக்கப் போகின்றீர்களா?

இந்த வரவு செலவுத்திட்டம் கடன் மறுசீரமைப்பு மூலம் பொருளாதார உறுதிப்பாட்டினை ஏற்படுத்தி நாட்டில் மீண்டும் பொருளாதார சுபீட்சத்தினை ஏற்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டதாக அரசாங்கத் தரப்பில் எடுத்துரைக்கப்படுகின்றது. ஆனால், இந்த வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் பலமான அத்திவாரம் இன்றி கட்டப்பட்ட கட்டடத்தில் அலங்காரம் செய்தது போன்றதாகவே நான் கருதுகின்றேன்.

நமது நாட்டின் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வரிக் கொள்கை தொடர்பாக ஓரிரு வார்த்தைகள் உரையாற்ற விரும்புகின்றேன் நாட்டின் வரிக் கொள்கை பொது மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தாதவாறு, சுமையினை ஏற்படுத்தாதவாறு மக்களுடைய வருமானத்துக்கு ஏற்ற வகையில் ஒரு சமச்சீரான பொருத்தப்பாட்டுடன் அமைய வேண்டும். ஆனால்,  அரசாங்கத்தின் நேர்முக வரி தொடர்பாக இன்று வரி செலுத்தும் அரச உத்தியோகத்தர்கள் அனைவருமே அதிருப்தியுடன் உள்ளனர்.

புதிய வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட வற் வரியானது நமது நாட்டில் எதிர்காலத்தில் மீண்டும் ஒரு அரகலவை ஏற்படுத்துமோ என்று நான் ஐயமுறுகின்றேன். புதிய வற் வரித்திட்டத்தில் நாட்டு மக்கள் ஒரு வேளை உண்பதும் கூட கஸ்டமாக இருக்கும் என்பதற்கான கட்டியங்கள் இன்று தெரிகின்றது. ஆனால், ஆட்சியாளர்களோ மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா என்பது போல விடாப்பிடியாகவே இருக்கின்றார்கள். எனக்கு பிரான்சியப் புரட்சி ஞாபகம் வருகிறது. உண்பதற்கு பாண்கூட இன்றி பரிதவித்த பிரான்சிய மக்கள் எமக்கு உண்பதற்காக பாணையாவது தாருங்கள் என்று ஆட்சியாளரிடம் கேட்ட மக்களுக்கு உங்களுக்கு உண்பதற்குப் பாண் இல்லையென்றால் கேக்கைச் சாப்பிடுங்கள் என்று கூறினானாம் அந்த மன்னன். இதுவே பிரான்சியப் புரட்சியில் ஏற்பட்ட அரகலவின் அத்திவாரம். அதையொத்த நிலைமையே இந்த வற் வரிமூலம்  நீங்கள் எதிர் கொள்ளப் போகின்றீர்களா என்று உங்களைக் கேட்க விரும்புகின்றேன்.

நமது நாட்டில் உச்ச நீதிமன்றமே நமது நாட்டின் கடந்தகால ஆட்சியாளர்களையும் அவர்களால் நியமிக்கப்பட்ட அரச உயர் உத்தியோகத்தர்களையும் பொருளாதாரக் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது மாத்திரமல்ல அந்த வழக்குத் தொடுனர்களுக்கு வழக்குச் செலவீனத்தையும் வழங்கவேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்புக்கு ஆட்சியாளர்களின் பதில் என்ன? இந்தத் தீர்ப்புத் தொடர்பாக ஆட்சியாளர்கள் மேற்கொள்ளும் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? இதுவா நாம் ஊழல்களை ஒழிக்கும் எமது தேசியக் கொள்கை. ஊழல்களை ஒழிப்பது தொடர்பாக தேசியக் கொள்கை வகுப்பதை விட ஊழல்களை ஊழல் வாதிகளைப் பாதுகாத்து ஊழல்களை வெளிப்படுத்துபவர்களைத் தண்டிப்பதே எமது தேசியக் கொள்கையாக உள்ளது.

எமது நாட்டின் நிதிப் பொருளாதார உறுதிப்பாடு தேசியக் கொள்கை தொடர்பான அமைச்சின் ஒரு முக்கிய கடப்பாடு எமது நாட்டுக்கான தேசிய திட்டமிடல் ஆணையம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இது அரசியல் சார்பற்றதாக சுதந்திரமாக நாட்டின் அபிவிருத்தி தொடர்பாக திட்டங்களைத் தீட்டுவதாக இருக்க வேண்டும். ஆட்சி மாறுகின்ற போது அபிவிருத்தித் திட்டக் கொள்கைகள் மாற்றமடையாதவாறு இந்தத் தேசியக் கொள்கைத் திட்ட ஆணைக்குழு அதிகாரம் மிக்கதாக இருக்க வேண்டும்.
அதே போன்று ஆட்சியாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ற விதமாக, ஆட்சியாளர்களின் உறவினர்களுக்கு ஏற்ற விதமாக, ஆட்சியாளர்களின் நண்பர்களுக்கு ஏற்றவிதமாக நாட்டின் தேசிய வரிக் கொள்கை அமையக்கூடாது.

இதே போன்று நாட்டின் கல்வித்திட்டம் தொடர்பாகவும் முறையான தேசியக் கொள்கை வகுக்கப்படவேண்டும். இவற்றுக்கேற்ப நிபுணத்துவ ஆலோசனைகள் துறைசார் நிபுணர்களிடமிருந்து பெறப்பட வேண்டும். இது போன்று நாட்டின் அபிவிருத்தி தொடர்பான ஒவ்வொரு துறைகளுக்கும் தேசியக் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.

எமது நாட்டின் மக்களது வரி வருமானம் வீணாக செலவிடப்படுதல் தொடர்பாக ஒரு சிறு உதாரணம். ஜனாதிபதியின் ஆலோசகர்கள். அமைச்சர்களின் ஆலோசகர்களின் என்று நியமிக்கப்பட்டிருப்பவர்களின் கல்வித் தகுதி என்ன? நாட்டின் ஜனாதிபதி அவர்களுக்கு ஒரு நாட்டின் துறைசார் அமைச்சர்களுக்கு நிபுணத்துவ ஆலோசனை வழங்குமளவுக்கு அவர்கள் துறைசார் வித்தகர்களா? இவர்களுக்hக வழங்கப்படும் அனுகூலங்கள் என்ன? இதை ஆட்சியாளர்கள் உங்கள் மனச்சாட்சியைத் தொட்டு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

இந்த நாடு தொடர்பாக தமிழ்த் தேசியக் கட்சியின் உறுப்பினர் என்ற வகையில் நான் எடுத்துரைக்கின்றேன். இந்த நாட்டில் பொருளாதாரச் சீரழிவுக்குக் காரணமானவர்கள் யார்? இந்த நாட்டில் பெருமளவு அரச வளங்களைக் கொள்ளையடித்தவர்கள் யார்? இந்த நாட்டில் அரச வளங்களை குடும்ப உறவுகளுக்காகப் பயன்படுத்தியவர்கள் யார்? என்று தெரிவித்துள்ளார்