மாணவனின் ஜனாஸா பெருந்திரளான மக்கள்கின் கண்ணிருடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 யூ.கே. காலித்தீன் – 
கடந்த 5ம் திகதி மத்ரஸாவில் மரணித்த மாணவனின் பிரத பரீசோதனையானது அம்பாறை பொது வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி சி.ரி. மகாநாமவின் அறிக்கையின் படி  கழுத்து நெரிக்கப்பட்டதால் மரணம் நிகழ்ந்துள்ளதாக அறிக்கையிட்டப்பட்டு மாணவின் உடல் நல்லடக்கத்திற்க்காக உறவினரிம் கையளிக்கப்பட்டது.
அதன் பின்னர் மரணமடைந்த மாணவனின் ஜனாஸாவானது சம்மாந்துறை பகுதியில் மார்க்க கடமைகள் நிறைவேற்றப்பட்ட பின்னர் பாதுகாப்பாக அவரது சொந்த ஊரான காத்தான்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு காத்தான்குடி முகையதீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் மஃரிப் தொழுகையின் பின்னர் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு அதே பள்ளிவாசல் மையவாடியில் பெருந்திரளான பொதுமக்களின் கண்ணீருடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதன் போது காத்தான்குடி அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத்தின் தலைவர், செயலாளர் உறுப்பினர்கள்,  சாய்ந்தமருது ஜம்மிய்யத்துல் உலமா சபையின் தலைவர், செயலாளார் உட்பட உறுப்பினர்கள் இம்மாணவின் மரணம் ஏற்பட்ட நாளிலிருந்து அடக்கம் செய்யப்படும் வரை கூடவே இருந்த சாய்ந்தமருது ஜனாஸா மக்கள் பேரவையின் ஒருங்கிணைப்பாளர்கள், காத்தான்குடி உலமாக்கள், புத்திஜீவிகள், பொதுமக்களென பெருந்திரளான மக்களின் பங்கு பற்றுதலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் மரணமானது கொலையா, தற்கொலையா என விசாரணையினை சாய்ந்தமருது பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்.
மத்ரஸா மாணவனின் மரணமானது கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை பொது வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி சி.ரி. மகாநாம அறிக்கையிட்டுள்ளார்.
இன்று (7) அம்பாறை பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற குறித்த மாணவனின் மரண விசாரணையின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் அம்பாறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் சேனாரத்ன குறித்த மத்ரஸா பாடசாலைக்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.இந்த விசாரணையில் சாய்ந்தமருது பொலிஸ் அதிகாரிகளான ஏ.எல்.எம் றவூப் ஆர் டபிள்யூ எம்.பி.ஜி.கே.எஸ்.மேகவர்ன உட்பட சாய்ந்தமருது வீதி போக்குவரத்து பொறுப்பதிகாரி எம்.யு .மஜீட்  பொலிஸ் உத்தியோகத்தர்  எஸ் .அக்பர் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் குறித்த மத்ரஸா மாணவனின் மரணமானது கொலையா அல்லது தற்கொலையா என்ற சந்தேகத்துடன் விசாரணை தொடர்ந்த வண்ணம் உள்ளதுடன் மாணவனின் மரண விசாரணைக்காக  சாய்ந்தமருது பொலிஸாரால் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட      மதரஸா  நிர்வாகியாகிய மௌலவி  கைது செய்யப்பட்டு மீண்டும்  பொலிஸ் நிலையம் ஒன்றின் தடுப்பு காவலில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் நாளை (8) கல்முனை நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
சிசிடிவி கமராவின் வன்பொருள் (HARD DISK) மாயமான விடயம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மத்ரஸா மாணவனின் மரணமானது கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை பொது வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி சி.ரி.மகாநாம இன்று அறிக்கையிட்டுள்ள நிலையில் மேற்படி விசாரணையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சிசிடிவி கமராவின் சேமிப்பகம் வன்பொருள் மீட்கப்பட்டால் உண்மைகள் பல வெளியாகும் என பொலிஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.