களுதாவளையில் ஆரோக்கிய சுக வாழ்வு மைய்ய கிளினிக் கட்டிடம் ஆளுநரினால் திறந்துவைப்பு!!

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

சுகாதார அமைச்சினால் உலக வங்கியின் நிதியுதவியுடனான ஆரம்ப சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 3.7 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள ஆரோக்கிய சுக வாழ்வு மைய்ய கிளினிக் கட்டிடம் களுதாவளையில் (04) திகதி கிழக்கு மாகாண ஆளுநரினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

களுதாவளை ஆரம்ப மருத்துவ சிகிச்சை பிரிவு வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி கே. மயுரேஷன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண ஆளுநரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமாகிய செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமாகிய சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமாகிய சிவ.சந்திரகாந்தனின் பிரதிநிதியாக
இராஜாங்க அமைச்சரின் இணைப்பு செயலாளர் பூ.பிரசாந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் சுகாதார அமைச்சின் உலக வங்கி நிதியுதவியுடனான ஆரம்ப சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் Primery Healthcare System Strengthening Project (PSSP) எனும் திட்டத்தின் ஊடாக 2022ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் ஊடாக பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் 3.7 மில்லியன் செலவில் மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் மேற்பார்வையோடு
இக்கட்டடம் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.

அதிதிகளின் வருகையைத் தொடர்ந்து பூமாலை அணிவித்து பேண்ட் வாத்தியங்களுடன் அதிதிகள் வரவேற்க்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து திட்ட விபரம் அடங்கிய பாதாதை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டதுடன் நாடா வெட்டி புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டது