டெங்கு நுளம்பு பரவக்கூடிய சூழலை வைத்திருப்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை
(  எம்.எம்.ஜெஸ்மின்)
அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் இடைவிட்ட மழை காரணமாக தேங்கி நிற்கும் நீர் மூலம் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் தெரிவித்துள்ளார்.

வீடுகள்,பாடசாலைகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், வெற்று வளவுகள், மதஸ்தலங்கள், விளையாட்டு மைதானங்கள்  மற்றும் பொதுச்சந்தைகள் ்போன்ற இடங்களில் மழைநீர் தேங்கி காணப்படுவதால் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரிக்கக்கூடும்.எனவே பொது மக்கள் இவ்வாறான இடங்களை அடையாளம் கண்டு நீர் தேங்கி நிற்கும் சூழலை இல்லாதொழிக்குமாறும்,குப்பை கூளங்களை குழிதோண்டி புதைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் பாடசாலை வளாகத்தில் நீர் தேங்கி நிற்பதால் சிரமதானம் மூலம் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாடசாலை அதிபர்கள் பணிக்கப்பட்டுள்ளனர்.
வீடுவீடாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தற்போது பரிசீலனை நடவடிக்கைகளில் ஈடுபடுவதனால் அவர்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும்,இதனையும் மீறி டெங்கு நுளம்புகள் பரவும் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.