சிறுபான்மை உரிமைகள் ஆணைக்குழுவொன்று இலங்கையில் நிறுவப்பட வேண்டும்.

( வி.ரி.சகாதேவராஜா)    சிறுபான்மை உரிமைகள் ஆணைக்குழுவொன்று இலங்கையில் நிறுவப்பட வேண்டும்.  என்று  சிறுபான்மையினர் பிரச்சினைகளுக்கான ஐக்கியநாடுகள் மன்றத்தின் 16வது அமர்வில் உரையாற்றிய பிரபல மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் மனித அபிவிருத்தி தாபனத்தின் நிறைவேற்று பணிப்பாளருமான கலாநிதி. பி.பி. சிவப்பிரகாசம் முன்மொழிவை சமர்ப்பித்துரையாற்றினார்.
சிறுபான்மையினர் பிரச்சினைகளுக்கான ஐக்கியநாடுகள் மன்றத்தின் 16வது அமர்வு ஜீனிவாவில் (30.11.2023) இடம்பெற்றது.
 இக்கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட மனித அபிவிருத்தி தாபனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி. பி.பி. சிவப்பிரகாசம் அவர்கள் கருத்து பகிர்வு கீழ்வருமாறு இடம்பெற்றது.
நான் கலாநிதி. பி.பி. சிவப்பிரகாசம், இலங்கையில் மனித அபிவிருத்தி தாபனத்தையும், GFOD மற்றும் IMADR ஐ பிரதிநிதித்துவப்படுத்துகின்றேன்.
சில நல்ல நடைமுறைகளை ஆரம்பித்து வைத்த இலங்கை அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், இலங்கையில் மலையக பெருந்தோட்ட சமூகத்தின் அபிவிருத்தியில் உள்ள சில முரண்பாடுகள் குறித்தும் நான் கவனம் செலுத்த விரும்புகிறேன். காணி மற்றும் வீடு என்பது சமூகம் எதிர்நோக்கும் மிக முக்கியமான பிரச்சினையாகும். ஏறக்குறைய 150 வருடங்களுக்கு முன்னர் ஆங்கிலேயர்களின் காலனித்துவ ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட லயன் அறைகளிலேயே இன்றும்; மலையக பெருந்தோட்ட சமூகத்தை சேர்ந்த மக்களில் 67 வீதமானவர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதே உண்மை. மேலும், நிலம் மற்றும் வீட்டு உரிமையும் பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது.
மொழி உரிமையும் பிரச்சினையாக காணப்படுகின்றது. நாட்டின் 13வது திருத்தச் சட்டம் மொழி உரிமையை உறுதிப்படுத்தினாலும், அரச நிறுவனங்களில் போதியளவு தமிழ் உத்தியோகத்தர்களை நியமிக்கத் தவறியமை, சிறுபான்மையினரின் நிலைமையை பரிதாபத்திற்குரியதாக மாற்றியுள்ளது.
மேலும் தோட்டத்தின் மருத்துவ மற்றும் சுகாதார பிரச்சினைகள். பெருந்தோட்ட சுகாதார சேவைகளை உயர்த்துவது தேசிய மற்றும் சர்வதேச தரநிலைகளுடன் இணைவதற்கான ஒரு கட்டாய நடவடிக்கையாகும். தற்போது, பெருந்தோட்ட மருந்தகங்களில் பெரும்பாலானவை தோட்டக் கம்பனிகளின் மேற்பார்வையின் கீழேயே காணப்படுகின்றது. இந்த அமைப்பு ஒட்டுமொத்த நாட்டின் சுகாதார கட்டமைப்பிற்கு குறிப்பிடத்தக்க சவால்களை முன்வைக்கிறது. அனைவருக்கும் தரமான சுகாதார சேவைகளைப் பெறுவதன் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பது, பெருந்தோட்ட சமூகத்தின் வாழ்க்கையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், நாட்டின் வளர்ச்சிக்கும் பங்களிக்கிறது.
எனவே சிறுபான்மை இன, மத அல்லது மொழி குழுக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக சிறுபான்மை உரிமைகள் ஆணைக்குழுவொன்று இலங்கையில் நிறுவப்பட வேண்டும் என்று நான் முன்மொழிகின்றேன்.