மட்டு.மேற்கில் மாணவர் பாராளுமன்ற அமர்வு : காரில் வந்திறங்கிய அமைச்சர்கள்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் வலய மட்ட மாணவர் பாராளுமன்ற அமர்வு இன்று(05) செவ்வாய்க்கிழமை கன்னன்குடா மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களை கொண்டு வலயமட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை வைத்து அமைக்கப்பட்ட பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வே இன்று நடைபெற்றது.

தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சபாநாயகர், குழுத்தலைவர், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் பதவி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாவது அமர்வின் போது, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் தமது கார்களில் வந்திறங்கி சபையில் அமர்ந்ததை தொடர்ந்து சாபாநாயகர் செங்கோலுடன் அழைத்துவரப்பட்டு சபை அமர்வு ஆரம்பமானது.

இதன்போது, சபாநாயகர் தனது தொடக்க உரையை மும்மொழிகளிலும் நிகழ்;த்தியிருந்தார். அவரைத் தொடர்ந்து பிரதமர் ஆங்கிலத்தில் உரையாற்றினார். ஏனைய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் தமது அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டங்கள் தொடர்பான கருத்துக்களை முன்வைத்தனர்.

இச்சபையில், ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தமையை காணமுடிந்தது. இது எடுத்துக்காட்டத்தக்கது.
செயலாளர் நாயகமாக மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் பதவி வகித்தமையுடன், பிரதிச்செயலாளர்களாக வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் பதவி வகித்தனர்.
இவ்வமர்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் கலந்து கொண்டார்.