கிழக்கு மாகாணத்தில் 712 மாணவர்களுக்கு 9 ஏ சித்தி!

மட்டக்களப்பு வலயம் முன்னணியில்..
( வி.ரி. சகாதேவராஜா)
அண்மையில் வெளியான  கல்விப் பொதுத் தராதர (சாதாரண) தரப் பரீட்சையில் -2022 (2023) கிழக்கு மாகாணத்திலுள்ள 17 கல்வி வலயங்களில் அதிகூடிய சித்திவீதத்தைப் பெற்று மட்டக்களப்பு வலயம் முதலிடத்தை பிடித்துள்ளது.

 கிழக்கு மாகாணத்தில் 26,874 மாணவர்கள் குறித்த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றினர்.
அவர்களில் 712 மாணவர்கள் 9 பாடங்களிலும் A சித்தி அடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 136 மாணவர்களும், கல்முனை கல்வி வலயத்தில் 122 மாணவர்களும், மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தில் 112 மாணவர்களும் என ஆகக் கூடிய எண்ணிக்கையில் 9A சித்தி பெற்றுள்ளனர் .
மாணவர்கள் பெற்றுள்ள சித்திகளின் அடிப்படையில்  மட்டக்களப்பு கல்வி வலயம் முதலாமிடத்தில் உள்ளது.
இரண்டாவது இடத்தில் கல்முனை வலயமும்  மூன்றாவது இடத்தில் மகா ஓயா வலயமும் வந்துள்ளது.
அக்கரைப்பற்று, மட்டக்களப்பு மத்தி, திருக்கோவில், அம்பாறை, மூதூர், மட்டக்களப்பு மேற்கு, பட்டிருப்பு ஆகிய கல்வி வலயங்கள் முறையே நான்கு முதல் பத்து வரையான  இடங்களுக்குள் வந்துள்ளது.
11 வது இடத்தில் சம்மாந்துறை வலயம் வந்துள்ளது.
ஏனைய ஆறு வலயங்களான தெஹியத்தகண்டிய, திருகோணமலை , திருகோணமலை மேற்கு ,கல்குடா, கந்தளாய் ,கிண்ணியா ஆகிய வலயங்கள் பின்னணியில் உள்ளன.