உலக சனத்தொகையில் 15 சதவீதமானவர்கள்    மாற்றுத்திறனாளிகள்.

(ஏறாவூர் நிருபர் – நாஸர்)
உலக சனத்தொகையில் 15 சதவீதமானவர்கள்    மாற்றுத்திறனாளிகளென ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் சிறுவர் நிதியத்தின்  இலங்கைகான பணிப்பாளர் அடிடிகோஸ் (03.12.2023)  தெரிவித்துள்ளார்.
உலகில் விசேட தேவையுடையவர்கள்  தமது திறமைகளை வெளிக்கொணருவதற்குப்  போதிய  சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை என்றும் அவர் கூறினார்.
விசேட தேவையுடையவர்கள்  தொழில் பயிற்சிபெறுவதற்கென      மட்டக்களப்பு – கும்புறுமூலையில் அமைந்துள்ள  நிலையத்தின் இரண்டாவது ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் சிறுவர் நிதியத்தின்                         ஆசிய பிராந்திய நாடுகளுக்கான பணிப்பாளர் ஹனிகே அவுட்கேர்க்                    பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
விசேட தேவையுடையவர்கள்  தொழில் பயிற்சிபெறுவதற்கு  வடக்கு கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள  தமிழ் மொழிமூலமான முதலாவது நிலையம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
சிறுவர் நிதியம் சமூக சேவைகள் திணைக்களத்துடன் இணைந்து நாட்டின் பதினொரு மாவட்டங்களில் இத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளது. இங்குள்ள பயிலுநர்களுக்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் சிறுவர் நிதியம் வழங்கியுள்ளது. அத்துடன்  இப்பயிற்சி நிலையத்திற்கு மல்டி மீடியா உபகரணம் ஒன்று இந்நிகழ்வின்போது சம்பிரதாயபூர்வமாக சிறுவர் நிதியத்தினால் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிறுவர் நிதியத்தின் பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, இந்தோனேசியா, இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளின் பிரதிகள் பங்கேற்றனர்.
இங்கு முதல் தொகுதியாக 25 இளைஞர் யுவதிகள்  தையல் மற்றும் இலத்திரனியல் பயிற்சிகளைப்பெறுகின்றனர்.
இப்பயிலுநர்கள் சுற்றாடலிலுள்ள கழிவுப்பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்பட்ட கருவிகளினால் பேண்ட் வாத்தியம் இசைத்து அதிதிகளை வரவேற்றனர்.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்எம்பீ. ரத்னாயக்க, சமூக சேவைகள் திணைக்களத்தின் அபிவிருத்திப் பிரிவு பணிப்பாளர் டபிள்யு டிடி கருணாரத்ன, மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ். புவனேந்திரன், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் உபதலைவர் போல் பொடி மற்றும் மனிதவள பிரிவின் உபதலைவர் ஸ்கொட்சேமன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இங்கு பயிற்சி பெற்ற இளைஞர் யுவதிகளினால் தைக்கப்பட்ட ஆடைகள் மற்றும் தயாரிக்கப்பட்ட இலத்திரனியல் உபகரணங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.பயிலுநர்களது கலைநிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன. தொழில் பயிற்சிகள் ஊடாக மாற்றுத்திறனாளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி சமூகத்தில் இணைப்பதே இத்திட்டத்தின் நோக்கமென சிறுவர் நிதியத்தின் தொடர்பாடல் நிபுணர் ஜுடிதீபன் பெரேரா தெரிவித்தார்.