ஏறாவூர் நிருபர் -நாஸர்)
சீரற்ற காலநிலையின்போது மட்டக்களப்பு – புன்னக்குடா கடலில் தனது நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்த 15 வயதுடைய சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் நேற்று புதன்கிழமை இரவு கரையொதுங்கியது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி -ஏறாவூர் எல்லை வீதியைச் சேர்ந்த ஜெகன் லதுஷன் என்ற சிறுவனே உயிரிழந்தவன்.
கடந்த செவ்வாய்கிழமையன்று மாலை புன்னக்குடா கடலில் தனது நண்பர்கள் நான்கு பேருடன் நீராடிக்கொண்டிருந்த வேளையில் சிறுவனை நீரடித்துச் சென்றுள்ளதையடுத்து காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கடல் கொந்தளிப்பு காணப்பட்டதனால் தேடுதல் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. எனினும் புதன்கிழமை மாலை புன்னக்குடா பிரதேசத்திலிருந்து சுமார் மூன்று கிலோ மீற்றர் தொலைவிலுள்ள களுவன்கேணி பிரதேசத்தில் சடலம் கரையொதுங்கியுள்ளது.
ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து திடீர் மரண விசாரணையதிகாரி எம்எஸ்எம். நஸிர் முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்தார். பின்னர் உடற்கூறு பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.
ஏறாவூர் பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதன்போது மரணமடைந்தவரின் பெற்றார் மற்றும் சம்பவ நேரம் கடல் குளித்த ஏனைய சிறுவர்களது வாக்கு மூலமம் பதிவுசெய்யப்பட்டது.