மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலுக்கு மன்னார் நீதிமன்றம் அனுமதி-

(வாஸ் கூஞ்ஞ 
மன்னார்  ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில்  27 ஆம் திகதி  இடம் பெற உள்ள உயிர் நீத்தவர்களுக்கான நினைவேந்தலுக்கு எதிராக தடை உத்தரவை பிறப்பிக்க கோரி அடம்பன் பொலிஸார் தடை உத்தரவை  மன்னார் நீதிமன்றத்தில் இன்று சனிக்கிழமை(25) கோரியிருந்த நிலையில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூற மன்னார் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக சட்டத்தரணி எஸ்.டினேசன் தெரிவித்தார்.

 குறித்த வழக்கு விசாரணை தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில்  26 ஆம் 27 ஆம் திகதிகளில்  இடம்பெற உள்ள உயிர் நீத்தவர்களுக்கான நினைவேந்தலுக்கு எதிராக தடை உத்தரவை பிறப்பிக்க கோரி அடம்பன் பொலிஸார் தடை உத்தரவை இன்று சனிக்கிழமை(25) மன்னார் நீதிமன்றத்தில் கோரி இருந்தனர்.

குற்றவியல் நடைமுறைக்கோவை 106 ஆம் பிரிவின் கீழ் குறித்த தடை உத்தரவை அடம்பன் பொலிஸார் கோரி இருந்தனர்.

-குறித்த வழக்கு இன்று சனிக்கிழமை (25) மதியம் மன்னார் நீதிமன்றத்தில் பதில் நீதவான் இ.கயஸ்பெல்டானோ முன்னிலையில் இடம்பெற்றது.

குறித்த வழக்கில் சுமார் 20 பேருடைய பெயர்கள் தனி நபர்களாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட 20 பேருடைய பெயர்கள் குறிப்பிட்டு  21 வது நபர்களாக ஏனைய பொது மக்கள் என  பெயர்கள் குறிப்பிடப்பட்டு குறித்த கட்டளையினை கோரி இருந்தனர்.

பதில் நீதவான் முன்னிலையில் விசாரணை இடம்பெற்றது.இதன்போது குறித்த நினைவேந்தலை அமைதியான முறையிலும்,அமைதிக்கு பங்கம் ஏற்படாத வகையிலும் நினைவு கூற மன்னார் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வுகளில் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான இலச்சினைகள்,மற்றும் கொடிகளை பயன்படுத்தாது,அமைதியான முறையில் நினைவு கூற நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.என சட்டத்தரணி எஸ்.டினேசன் தெரிவித்தார்.

இதேவேளை முருங்கன் பொலிஸாரினால் 4 நபர்களுக்கு எதிராகவும்,மடு பொலிஸார் 2 நபர்களுக்கு எதிராகவும் தடை உத்தரவு கோரியிறுந்தமையும் குறிப்பிடத்தக்கதது