கிழக்குப் பல்கலைக்கழத்தின் கலைகலாசார பீடத்தின் ஐந்தாவது ஆய்வு மாநாடு கலைகலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி வ. குணபாலசிங்கம் தலைமையில் 21.11.2023 அன்று நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வ. கனகசிங்கம் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். இம்மாநாட்டின் ஆதாரசுருதி உரையை கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தின் முன்னைநாள் பீடாதிபதியும், பொதுச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினரும், இலங்கை தொழிநுட்ப தகவல் நிறுவனத்தின் சட்டக்கல்லூரியில் தற்பொழுது பேராசிரியராகப் பணிபுரிபவருமான பேராசிரியர் நா. செல்வக்குமாரன் நிகழ்த்தியிருந்தார். ஐந்தாவது வருடாந்த மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்பட்டவர் நுண்கலைத்துறையின் முதுநிலை விரிவுரையாளர் திரு. சு. சந்திரகுமார் ஆவார். ஆய்வரங்கின் ஒருங்கிணைப்புக் குழு மிகவும் சிறப்பாக நிகழ்வை ஒழுங்கமைத்திருந்தனர். தொடக்க நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர், நூலகர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆய்வரங்கு ஆங்கிலக் கற்கைத் துறையின் கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது. ஆய்வரங்கின் கருப்பொருள் “பன்மைத்துவ சமூகங்களில் கல்வியின் ஊடாக சமத்துவம், ஒப்புரவு, சமநீதி” என்பதாகும். இதற்கமைய பல ஆய்வாளர்கள் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்து அவர்களது ஆய்வு அறிகைகளை வெவ்வேறு தளங்களில் முன்மொழிந்தனர். உள்நாட்டு, வெளிநாட்டு ஆய்வாளர்கள் 51 பேர் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்திருந்தனர். அண்மையில் பட்டம் பெற்ற மாணவர்கள் ஆய்வாளர்களாகச் செயற்பட்டு, அவர்களது புதிய கண்டுபிடிப்புக்களைச் சமர்ப்பித்து உரையாடலுக்கு உட்படுத்தியமை சிறப்பம்சமாகும். மிகவும் காத்திரமாகவும், நேர்த்தியாகவும் இம்மாநாடு இரண்டு அமர்வுகளாக 12 எண்ணக்கருக்களை மையப்படுத்தி நடைபெற்றது. ஆய்வரங்கில் அதிகளவான பேராசிரியர்கள், முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் எனப் பலரும் தமது கருத்தாக்கங்களை முன்நிறுத்தி உரையாடினர்.