சீனிக்கான கட்டுப்பாட்டு  சில்லறை விலை நீக்கம்.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) அரசாங்கத்தினால் சீனிக்கான கட்டுப்பாட்டு  விலை நிர்ணயிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நீக்கப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் சீனி விநியோகம் சுமுகமாக நடைபெறும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.

உள்ளூர் சந்தையில் சீனிக்கான தட்டுப்பாட்டைத் தொடர்ந்து சீனிக்கான அதிகூடிய சில்லறை கட்டுப்பாட்டு   விலையை பாவனையாளர்  அலுவல்கள் அதிகார சபை   நீக்கியுள்ளது.

அதிகாரசபையின் தலைவர் சாந்த நிரியல்லவினால் நேற்று  (நவம்பர் 21) வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் இது தெரிவிக்கப்பட்டது.

அரசாங்கத்தின் நவம்பர் மூன்றாம் திகதிய அதி விசேஷமான வர்த்தமானி அறிவித்தலுக்கு இணங்க, 2003 ஆம் ஆண்டின் ஒன்பதாம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை சட்டம்  (திருத்தியமைக்கப்பட்டது) 20 (5) ஆம் பிரிவின் கீழான கட்டளையின் கீழ் சீனிக்கான ஆகக்கூடிய கட்டுப்பாட்டு விலையை விதித்து அதற்கிணங்க சீனி வியாபாரத்தில் ஈடுபடுமாறு அறிவித்திருந்தது.

அதன்படி, சீனி ஒரு கிலோகிராம்  ஆகக் கூடுதலான சில்லறை விலையாக வெள்ளை சீனி  பொதிசெய்யப்படாது 275.00 ரூபாவிற்கும்,  பழுப்பு அல்லது சிவப்பு சீனி 330.00 ரூபாவிற்கும்    விற்பனை செய்யப்பட வேண்டுமெனவும், பொதிசெய்யப்பட்ட வெள்ளை சீனி 295.00 ரூபாவிற்கும்,   பழுப்பு அல்லது சிவப்பு சீனி 350.00 ரூபாவிற்கும்  விற்கப்பட வேண்டும்.

குறித்த ஆகக்கூடிய சில்லறை விலைக்கு அதிகமாக சீனி இறக்குமதியாளர், உற்பத்தியாளர், விநியோகத்தர், வழங்குநர் அல்லது வியாபாரி எவருமோ விற்பனை செய்ய  முடியாது எனத்  அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புதிய வர்த்தமானி அறிவித்தலின் மூலம் இந்த விலைகள் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை 2003ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டம் (திருத்தப்பட்ட) 20 (5) பிரிவின் கீழான கட்டளைக்கு இணங்க: ஒரு கிலோ கிராம் வெள்ளை /சிவப்பு  வேகவைத்து/அவித்துப் பெறப்பட்ட நாட்டரிசி  220 ரூபாவிற்கும், உள்நாட்டு சீரக  சம்பா தவிர்ந்த அரிசி 230 ரூபாவிற்கும், உள்நாட்டு கீரி சம்பா 260 ரூபாவிற்கும் விற்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பின் போது அரிசி விற்பனை தொடர்பில் ஒக்டோபர் மாதத்தில் 3 வியாபாரிகளுக்கு எதிராகவும், நவம்பர் 22ஆம் திகதி இன்று வரை 6 வியாபாரிகளுக்கு எதிராகவும்   சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அலுவலகம் தெரிவித்துள்ளது.