கட்டாக்காளிகள் தங்குமிடமாக மாறியுள்ள பஸ் தரிப்பிடம்.

அபு அலா – திருகோணமலை மாவட்ட கோபாலபுரம் ஆயுள்வேத வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள பஸ் தரிப்பிடம் கடந்த பல மாதங்களாக யாரும் கவனிப்பாரற்ற நிலைமையில் காணப்படுவதாக அப்பிரதேச மக்களும், பிரயாணிகளும் கவலை தெரிவிக்கின்றனர்.
குச்சவெளி பிரதேச சபைக்கு கீழுள்ள இந்த பஸ் தரிப்பிடத்தில், அப்பிரதேசத்திலுள்ள பொதுமக்கள் தங்களின் அன்றாடத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக திருகோணமலைக்கோ அல்லது புல்மோட்டை போன்ற பிரதேசங்களுக்குச் செல்லும் பிரயாணிகளும், அரச ஊழியர்களும் பஸ்ஸிக்காக தங்கி நின்று செல்ல முடியாததொரு துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பஸ் தரிப்பிடத்தில் இரவு நேரங்களில் கட்டாக்காளிகள் தங்குமிடமாகவும், அதன் கழிவுகளும் காணப்படுகின்றது. இதுதொடர்பில் குச்சவெளி பிரதேச சபைக்கு அறிவித்தும் அதை கண்டும் காணமல் மிக நீண்டகாலமாக கவனிப்பாரற்ற நிலைமையில் சுத்தம் செய்யப்படாது காட்சியளிக்கின்றது. தற்போது மழைகாலம் என்பதால், குறித்த பஸ் தரிப்பிடத்தில் தங்கி நின்று செல்ல வேண்டிய கட்டாய நிலைக்கு அப்பிரதேச பிரயாணிகளும், அரச ஊழியர்களும் பாரிய இன்னல்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
எனவே, குறித்த பிரதேச சபையின் செயலாளர் இவ்விடயத்தை கவனத்திற்கொண்டு இந்த பஸ் தரிப்பிடத்தை சுத்தம் செய்து பிரயாணிகள் தங்கி நின்று செல்லக்கூடிய வகையில் சுத்தம் செய்து கொடுக்கின்ற அதேவேளை, அதை தொடராக பராமரிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.