பேசாலையில் காற்றாலைகள் அமைக்க அடாத்தாக தனியார் காணியில் பரீட்சாத்திர கோபுரம் அமைக்க மக்கள் எதிர்ப்பு.

( வாஸ் கூஞ்ஞ) பேசாலை பகுதியில் மின் காற்றாலை அமைப்பதற்காக தனியார் காணியில் அடாத்தாக கோபுரம் அமைக்க அதானி குழுமம் எடுக்கும் முயற்சிக்கு காணி உரிமையாளர்கள் தடை விதிக்கின்றபோதும் அதற்கு எதிராக அதானி குழுமம் செயல்படுவதைக் கண்டித்து பேசாலை மக்கள் ஒன்று திரண்டுள்ளனர்.

மன்னார் தீவு பகுதியில் தொடர்ந்து காற்றாலை அமைக்க வேண்டாம் என இப்பகுதி மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றபோதும் மக்களின் குரல்களுக்கு செவிசாய்க்கப்படாது வட கடற்கரையோரப் பகுதியில் அதானி குழுமத்தைச் சார்ந்தவர்கள் காற்றாலை அமைப்பதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு அங்கமாக மன்னார் பிரதேச செயலகத்தின் ஊடாக தனியார் காணிகளை சுவீகரிக்கும் நோக்குடன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இது தொடர்பாக அண்மையில் நடைபெற்ற மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்ட போது பிரதேச செயலாளரோ அல்லது கிராம அலுவலர்களோ அரசாங்க காணிகள் தொடர்பாக செயல்படலாமேயொழிய தனியார் காணிகளை அடாத்தாக பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் பேசாலை பகுதியில் காற்றாலை அமைப்தற்கான முன்னேற்பாடாக தனியார் காணி ஒன்றில் பரிச்சாத்திர கோபுரம் கட்டும் பணி ஆரம்பமாகியுள்ளது.

இதை காணி உரிமையாளர்கள் தங்கள் அனுமதியின்றி அமைக்கப்படுவதால் பொலிஸ் நிலையத்தில் இதை தடைசெய்ய நடவடிக்கை எடுக்கும்படி முறையீடும் செய்தனர்.

ஆனால் இது பலனளிக்காத நிலையைத் தொடர்ந்து இவற்றை நிறுத்துவதற்கு பேசாலை மக்கள் ஒன்று திரண்டு தடை செய்ய நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

மன்னார் பிரதேச சபை இப்பகுதியில் காற்றாலை அமைப்தற்கு அனுமதி வழங்கியதா? என்ற சந்தேகத்தில் மன்னார் பிரதேச சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை புதன்கிழமை (15) நடாத்துவதற்கு முஸ்தீப்பு எடுக்கப்பட்டிருந்த போதும் தற்பொழுது மன்னாரில் தொடர்ச்சியான மழை வீழ்ச்சி காணப்படுவதால் இந்த கவனயீர்ப்பு போராட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.