ஊடகவியலாளர்கள் சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும். 

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)     ஊடகவியலாளர்கள் சமூகத்தில் கௌரவமான பொறுப்பை சுமந்தவர்கள் ஆவார்கள். அவர்கள் தமது பொறுப்பையும் கடமையையும் சமூகத்தின் எதிர்காலம் நோக்கியதாக முன்னெடுக்க வேண்டும். இதனை மையமாக தொண்டு ஊடகப் பணி அமைய வேண்டும் என இலங்கை இராணுவத்தின் ஊடகத்துறை ஆலோசகர் டி.பி. சிசிர குமார விஜயசிங்க தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்தினருக்கும் ஊடகத்துறையில் பணியாற்றுபவர்களுக்கும் இடையில் நல்லிணக்க புரிந்துணர்வை ஏற்படுத்தும் முகமாக இலங்கை இராணுவத்தின் 24வது படைப்பிரிவு மற்றும் இளைஞர் தன்னார்வக் குழு என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த அம்பாறை மாவட்டத்தின் தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஒரு நாள் செயலமர்வு  24 வது இராணுவ படை பிரிவின் அம்பாறை – மல்வத்தை தலைமை அலுவலகத்தில் (11) நடைபெற்றது.

இலங்கை இராணுவத்தின் 24வது படைப் பிரிவின் கட்டளையிடும் அதிகாரி மேஜர் ஜெனரல் விபுல சந்திரசிறி தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் இலங்கை இராணுவத்தின் ஊடக ஆலோசகர் டி.பி சிசிர குமார விஜயசிங்க வளவாளராக கலந்து கொண்டு விளக்கமளிக்கும் போதே இதனை தெரிவித்தார். தொடர்ந்து இங்கு விளக்கமளிக்கையில்,

இராணுவத்தினருக்கு இந்த நாட்டை பாதுகாப்பதற்கும் அவர்களுடைய கடமையை செய்வதற்கு எவ்வாறு பொறுப்புக்கள் இருக்கிறதோ அதேபோன்று ஊடகவியலாளர்களுக்கு இந்த நாட்டை பாதுகாப்பதற்கும் அவர்களுடைய கடமையை செய்வதற்கும் பொறுப்புகள் இருக்கின்றன. ஆனால் இன்று சில ஊடக நிறுவனங்களும் ஊடகவியலாளர்களும் அரசியல் சார்ந்தவர்களால் வாங்கப்படுகின்ற துர்ப்பாக்கியமான நிலை எமது நாட்டில் ஏற்பட்டிருக்கிறது. இதிலிருந்து விடுபட்டு ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக பயணிக்க வேண்டும். மக்களுக்கு ஒரு தகவலை சொல்லுகின்ற பொறுப்பு ஊடகவியலாளர்களுக்கு உண்டு. அதனை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். மக்களை திசை திருப்பும் வகையில் பிழையான அல்லது பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் சிலர் வெளியிடுகிறார்கள். இறுதி யுத்தத்தின் போது சிலர் வெவ்வேறு நாடுகளில் இருந்து ஊடகவியலாளர்கள் என்று கூறிக்கொண்டு ஊடக நிறுவனங்களின் அடையாள அட்டைகளையும் கொண்டு வந்து அவர்கள் யுத்தம் நடைபெறுகின்ற பகுதிகளுக்குள் சென்று பயங்கரவாதிகளுக்கு தகவல்கள் கொடுப்பவர்களாக செயல்பட்டதன் காரணமாக நாம் தகவல் திணைக்களத்தில் பதிவு செய்தவர்களுக்கு அனுமதியை வழங்கி இருந்தோம்.

நாட்டை பாதுகாக்கும் பொறுப்பு இராணுவத்தினருக்குண்டு. இராணுவத்தினருடன் இணைந்து நாட்டை பாதுகாக்கின்ற பொறுப்பில் ஊடகவியலாளர்கள் பணியாற்ற வேண்டும். எதிர்காலத்தில் ஊடகத் துறையில் பணியாற்றியவர்களையும் ஊடகவியலாளர்களையும் இராணுவத்தினருடன் ஒன்றிணைத்து பொதுமக்களுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய ஒரு நாட்டை கட்டி எழுப்ப வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. இதற்கு ஊடகவியலாளர்களாகிய நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதன் போது ஊடகவியாளர்கள் இராணுவத்தினருடன் இணைந்து செயல்படுத்த வேண்டிய விடயங்கள், பொதுமக்கள் சமூக ஊடகத்தை பயன்படுத்தும் முறைகள், உண்மை தன்மையான செய்திகளை பொது மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டியதன் அவசியம் மற்றும் ஊடகவியலாளர்களின் கடமைகளும் பொறுப்புகளும் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டன.

கிழக்கில் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கேட்டறிந்து கொண்டதுடன் கலந்து கொண்டவர்களுக்கு இராணுவத்தினரால் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. இதில் இளைஞர் தன்னார்வ குழு ஸ்தாபகர் நாசிறூன் சுலைமான், இராணுவ ஊடகப் பிரிவில் கடமையாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.