(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு மேச்சல் தரை பகுதியான மயிலத்தமடு மாதவனை பகுதி அரசகாணியில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை உடனடியாக வெளியேறுமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் அன்வர் சதாக் இன்று திங்கட்கிழமை(13) உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.
கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள குறித்த அரச காணியில் சட்டவிரோதமாக சிங்கள மக்கள் குடியேறியுள்ளவர்கள் வெளியேறதாநிலையில் அவர்களுக்கு எதிராக மாகாவலி அதிகாரசபையின் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதனையடுத்து வழக்கு விசாரணை இடம்பெற்றுவந்த நிலையில் அந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் சார்பில் ஆஜராண சட்டத்தரணி யுத்தத்திற்கு முன்னர் 12 சிங்கள குடும்பங்கள் குடியேறி வாழ்ந்து வந்ததாக முன்வைத்தார்
சட்டவிரோத குடியேற்ற வாசிகள் அந்த பகுதியில் வாழ்ந்ததற்கான சட்டரீதியான ஆவணங்களை கடந்த 10 ம் திகதி வழங்குமாறு நீதவான் கால அவகாசம் வழங்கிய நிலையில் அவர்கள் அதற்கான ஆதாரத்தை வழங்காத நிலையில்; இன்று 13 ம் திகதி குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்த நிலையில் சட்டவிரோத குடியேற்றவாசிகளை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் அன்வர் சதாக் தீர்ப்பளித்து கட்டளையிட்டார்.
இதேவேளை குறித்த பகுதியில் சட்டவிரோத குடியேற்றவாசிகளை வெளியேற்றுமாறு பண்ணையாளர்கள் இன்று 60 நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது