தீபாவளி பரிசாக  பொத்துவில் கனகர் கிராம மக்கள் 73 பேருக்கு  காணி அனுமதிப்பத்திரம் வழங்கிவைப்பு.

(வி.ரி.சகாதேவராஜா)    தீபாவளி பரிசாக கடந்த  33வருடங்களாக  மறுக்கப்பட்டு வந்த பொத்துவில் கனகர் கிராம மக்களில் முதற்கட்டமாக 73 பேருக்கு  காணி அனுமதிப்பத்திரம் வழங்கிவைக்கப்பட்டது.
 கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் குறித்த காணி அனுமதிப்பத்திரங்களை நேற்று முன்தினம் திருகோணமலை காணி ஆணையாளர் பணிமனையில் வைத்து வழங்கி வைத்தார்.
.
ஆளுநர் செந்தில் தொண்டமான் கடந்த யூலை மாதம் 11ஆம் திகதி அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்த வேளை சர்ச்சைக்குரிய கனகர் கிராமத்திற்கும் விஜயம் செய்தார். அப்போது உறுதியளித்தபடி குறித்த காணி அனுமதிப்பத்திரங்களை அவர் நேற்று முன்தினம் வழங்கி வைத்தார்.
அவ் வைபவத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான தவராசா கலையரசன், எஸ்எம். முஷாரப், கபில அத்துக்கோரள  பொத்துவில் பிரதேச செயலாளர் பிர்னாஸ் மற்றும்  உள்ளிட்ட பிரமுகர்கள் சமுகமளித்திருந்தனர்.
பொத்துவில் கனகர் கிராம மக்களின் கடந்த 33 வருட கால போராட்டத்திற்கு முதல் கட்ட நிவாரணமாக இந்த காணி அனுமதிப்பத்திரம்  வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான போராட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் முன்னாள் காரைதீவு தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் பொத்துவில் பிரதேச முன்னாள் உப தவிசாளர் பெருமாள் பார்த்திபன் உள்ளிட்ட பல தமிழ் தேசிய பிரமுகர்கள் பிரதான பங்கினை வகித்திருந்தார்கள்.
போராட்டத் தலைவி ரங்கத்தனா தலைமையிலான மக்கள் குழுவினர்  அந்த இடத்திலே முகாம் அமைத்து வருட கணக்கில் போராடி வந்தார்கள்.
இது தொடர்பில் போராட்டத்தில் பங்கெடுத்த காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் கூறுகையில்..
இங்கு வாழ்ந்து வந்த மக்கள் 1985 க்கு பின்னர் யுத்தத்தில் இடம்பெயர்ந்தனர். அங்கு
வாழ்ந்த 226 பேரில் முதல் கட்டமாக 73 பேருக்கு காணியை விடுவிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. ஒருவருக்கு 1 ஏக்கர் 20 பேர்ச்சஸ் காணி வழங்கப்படும். பயிர்ச்செய்கைக்காக 1 ஏக்கர் காணியும் வீடு அமைக்க 20 பேர்ச்சஸ் காணியும் வழங்கப்படவிருக்கிறது.
எம்மைப் பொறுத்தவரை அனைவருக்கும் இக் காணிகள் பகிரந்தளிக்கப்பட வேண்டும் என்றார்.
வரலாறு.
இற்றைக்கு 61வருடங்களுக்கு முன்பு அங்கு வாழ்ந்துவந்த  அந்த மக்கள் தமது காணிகளைக்கோரி கடந்த 33வருடங்களாக போராட்டத்திலீடுபட்டுவந்தனர்.
 1960களில் சுமார் 278குடும்பங்கள் வாழ்ந்துவந்தன. 1981களில் முன்னாள்  பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் காலத்தில் முன்னாள் எம்.பி. அமரர் எம்.சி.கனகரெத்தினத்தின் முயற்சியால் வீடுகட்ட அரை ஏக்கர் நிலமும் பயிர்செய்ய 2ஏக்கர் நிலமும் தரப்பட்டு 30வீடுகளைக்கட்டி கொடுக்கப்பட்டு அவர்கள் மகிழ்ச்சியாக சேனைப்பயிர்ச்செய்கையுடன் வாழ்ந்துவந்தனர்.
1990களில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த அவர்களை கடந்த 32வருடங்களாக அங்கு  வனபரிபாலனஇலாகா குடியேற அனுமதிக்கவில்லையென்பது பிரதான குற்றசாட்டாகும்.
எது எப்படியிருந்தபோதிலும் அவர்கள் வாழ்ந்த பிரதேசம் இன்று மிகவும் பயங்கரமான சூரப்பற்றைகளினால் சூழ்ந்து காடுமண்டிக்காணப்படுகின்றது.  அந்தக்காட்டினுள் பாழடைந்து இடிந்து தகர்ந்த நிலையில் அவர்களது 30வீடுகளும் காணப்படுகின்றன. கூடவே அவர்கள் பாவித்த மலசலகூடங்களும் தகர்ந்தநிலையில் காணப்படுகின்றன. அதாவது அந்த மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் நிறையவேயுள்ளன.
இதுவரை பாராளுமன்ற உறுப்பினர் தொடக்கம் பல அரசியல்வாதிகள் சமுகசேவையாளர்கள் எனப்பலரும் வந்து கலந்துரையாடி பல உறுதிமொழிகளைம்  அளித்துள்ளார்கள். வனத்துறை உயரதிகாரியும் பிரதேசசெயலாளரும் இக்காணியை மீளளிக்க உறுதிகூறியுள்ளநிலையிலும் போராட்டம் தொடர்ந்தது.
அது இன்று கட்டம் கட்டமாக நிறைவேறத்தொடங்கியிருப்பதுகண்டு மகிழச்சியடையலாம்.