பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் பல்வேறு அபிவிருத்திப்பணிகள்

துறைநீலாவணை(இ.சுதாகரன்)

பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் புனரமைக்கப்பட்ட வகுப்பறைகள் ,பாடசாலைத் தோட்டம்,மலசல கூடங்கள் திறந்து வைக்கப்பட்டன

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் புனரமைக்கப்பட்ட வகுப்பறைகள், மல சல கூடங்கள்,பாடசாலைத் தோட்டம் என்பன புதன்கிழமை காலை 10 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டன.

கடந்த சுனாமி அனர்த்தத்தின் போது முழுமையாக சேதமடைந்த குறித்த பாடசாலை 2005ஆம் ஆண்டில் ரோட்டரிக் கழகத்தினால் மீளப் புனரமைக்கப்பட்ட நிலையில் கட்டடத்தின் கூரைகள் யாவும் காலப்போக்கில் சிதைவடைந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பினருக்கு பாடசாலைச் சமூகத்தினர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக பல இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட வகுப்பறைகள், மலசல கூடங்கள் ,சுற்றுமதில் ,குடிநீர் மற்றும் பாடசாலைத் தோட்டம் என்பன உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டன.

வித்தியாலயத்தின் முதல்வர் திரு தங்கராசா சசிகாந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிதரன் மற்றும் பிரதி அதிபர்.எல்.சுதாகரன், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் எஸ்.கணேசலிங்கம் ,ஐ.எம்.எச்.ஒ அமைப்பின் பௌதீக வளங்களுக்குப் பொறுப்பானவரும் பாடசாலையின் சிரேஷ்ர ஆசிரியருமான ஜே.மேவின் உட்பட பகுதித் தலைவர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள்,நலன் விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.