சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக தங்கம் கடத்த முற்பட்டவர்கள் படகுடன் கைது

(வாஸ் கூஞ்ஞ)

சட்டவிரோதமாக மன்னார் கடல் மார்க்கமாக தங்கம் கடத்த முற்பட்டவர்களை கடற்படையினர் மடக்கிப் பிடித்தலில் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் தங்கம் மற்றும் அவர்கள் பாவித்த வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் ஓலைத்தொடுவாய்க்கு அப்பால் உள்ள பகுதியில் வெள்ளிக்கிழமை (03) மாலை கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடல் வழிகள் ஊடாக நிகழும் மோசமான செயற்பாடுகளைத் தடுக்கும் நோக்கில் கடற்படையானது தீவைச் சுற்றியுள்ள கரையோர மற்றும் கடற்பரப்புகளில் வழக்கமான தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கமைய ஓலைத்தொடுவாய்க்கு அப்பால் இந்த விசேட நடவடிக்கையை மேற்கொண்டதுடன் கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை இடைமறித்துள்ளது.

மேலதிக சோதனையின் போது உள்ளூரிலிருந்து கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும்  படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 02 கிலோ 150 கிராம் தங்கம் , 05 சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்டது.

கடற்கரையை அண்மித்த பகுதியில் மேலதிக சோதனைகளை மேற்கொண்ட கடற்படையினர் இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 28 முதல் 56 வயதுக்குட்பட்ட வங்காலை மற்றும் மன்னார் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள்  தங்கம் மற்றும் பிற வாகனங்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறையில் உள்ள சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர் என்றும் பாதுகாப்பு பிரிவிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.