வடக்கில் காணிகளில் கைவைக்கும் அவுஸ்திரேலியாவின் அத்துமீறலுக்கு சிவில் அமைப்பு எதிர்ப்பு

இலங்கையின் வடமாகாணத்தின் மன்னாரில் கனிய மணல் ஆராய்ச்சி மற்றும் அகழ்வுக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் கரையோர காணிகளை அவுஸ்திரேலிய நிறுவனம் மக்களை ஏமாற்றி கொள்வனவு செய்துள்ளதாக அப்பகுதி சிவில் அமைப்பு ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது.

காணி உரிமையாளர்களுக்கு அதிக விலை கொடுத்து கரையோரத்தில் நிறுவனம் கொள்வனவு செய்துள்ள காணியின் அளவு 3,000 ஏக்கர்களாகும் என மன்னார் பிரஜைகள் குழுவின் உறுப்பினர் ஜேம்ஸ் ஜேசுதாசன் மன்னாரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

“அவுஸ்திரேலிய நிறுவனம் பொய்யான வார்த்தைகளைக் கூறி 3,000 ஏக்கர் காணிகள் இவர்களால் வாங்கப்பட்டுள்ளன. உள்ளூர் மக்களைக் கொண்டு அந்த மக்களுக்கு அதிக விலைகளைக் கொடுத்து இந்த காணியை அகழ்வுப் பணிக்காக சுவீகரித்துள்ளார்கள். இந்த தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன. ”

2019 – 2021 காலப்பகுதியில் தலைமன்னார் தொடக்கம் நடுக்குடா வரையான கடற்கரையில் அமைந்துள்ள காணியை அவுஸ்திரேலிய நிறுவனம் அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்துள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த காணிகள் சூரிய சக்தியை உற்பத்தி செய்வதாக கூறி கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பிரஜைகள் குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஜேசுதாசன் தெரிவிக்கின்றார்.

“இதன் பின்விளைவுகளை நாங்கள் ஏற்கனவே கூறியுள்ளோம். 40 அடி ஆழத்திற்கு தோண்டி மண்ணை சேகரிக்கும் போது, கடல் நீர் நன்னீருடன் கலக்கும் போது, தீவில் வாழும் மக்கள், விலங்குகள் மற்றும் வளங்கள் அழிந்துவிடும். சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்வதற்காக இந்த காணிகளை கையகப்படுத்துவதாக கூறி மக்களை ஏமாற்றி இந்த நிலங்களை வாங்கியுள்ளனர்.”

கரையோரத்தில் ஆய்வுகளை நடத்துவதில்லை எனக் கூறிய அவுஸ்திரேலிய நிறுவனம், கரையோரக் காணிகளை ஏன் கையகப்படுத்தியது என மன்னார் பிரஜைகள் குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஜேசுதாசன் மேலும் கேள்வி எழுப்பினார்.

“பொய்யான காரணங்களைச் சொல்லி, இந்த கரையோரத்தில் மண்களை அகழ்வதுதான் அவர்களுடைய நோக்கம். அவ்வாறு அகழ்ந்தால் பல்லாயிரக்கணக்கான வரலாற்றுக் காரணங்களைக் கொண்ட இலங்கையின் முக்கியமான ஒரு தீவு, கடலுக்குள் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.”

பொதுமக்களின் தொடர் எதிர்ப்பினால், 2022 மார்ச்சில் கனிய மணல் அகழ்வை நிறுத்திவிட்டு இயந்திரங்களுடன் வெளியேற வெளிநாட்டு நிறுவனம் தீர்மானித்திருந்தது.

“மக்களின் பாதுகாப்பிற்கு இடையூறாக நாங்கள் மணலை அகழ்வதில்லை, தொடர்புடைய சட்டங்களுக்கு அமையவே நாம் பணியாற்றுகின்றோம். மக்களிடமிருந்து எதிர்ப்பு வந்ததால் மணல் அகழ்வை நிறுத்திவிட்டு, இயந்திரங்களுடன் தீவை விட்டு வெளியேறுவோம்,” என, கனிய மணல் ஆய்வு மற்றும் அகழ்வில் ஈடுபட்டு வரும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டைட்டேனியம் சேன்ட் நிறுவனத்தின் இலங்கைப் பிரதிநிதி எஸ்.சாலிய தெரிவித்தார்.

மன்னார் தீவுக்கும், மக்கள் வாழ்விற்கும் மற்றும் சுற்றுச்சூழலுக்கும் கனிய மணல் ஆய்வு மற்றும் அகழ்வாராய்ச்சியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆலோசிப்பதற்காக மன்னார் பிரஜைகள் குழுவினால் 2022 மார்ச் மாதம் மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அவுஸ்திரேலிய நிறுவனத்தின் பிரதிநிதி இவ்வாறு தெரிவித்தார்.

போவது என்றால் விரைந்து செல்லுங்கள்

அந்த சந்தர்ப்பத்தில் சுற்றாடல், மனித உரிமைகள், கடற்றொழில், விவசாயம் உள்ளிட்ட தொழில்சார் அமைப்புகள்,  கிராம அமைப்புகள், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில்,  மன்னார் பிரஜைகள் குழு தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தெளிவாக கூறியிருந்தது.

மன்னார் தீவில் பாரியளவான மணல் அகழ்வினால், உப்பு நீர் கசிவு ஏற்பட்டு குடிநீர் மாசடைவதோடு, மீன்பிடி ஆரம்பக் கைத்தொழில்களை வாழ்வாதாரமாகக் கொண்ட பல்லாயிரக்கணக்கான தீவுவாசிகளின் வாழ்க்கை சீர்குலைக்கப்படும் என மன்னார் சுற்றாடல் பாதுகாப்பு அமைப்பு சுட்டிக்காட்டியிருந்தது.

“பாரம்பரிய மீன்பிடித் தளங்கள் மற்றும் வாழ்வாதாரங்களின் அழிவு, கிணறுகள் மற்றும் நிலத்தடி நீரின் உப்புத்தன்மை அதிகரிப்பு, பழைய பனை காடுகளை அழித்தல், புலம் பெயர்ந்த பறவைகளின் வாழ்விடங்களை அழித்தல், சுற்றுலாத் துறைக்கு ஏற்படும் சேதம் போன்ற சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார விளைவுகள் ஏராளம். அத்துடன் மன்னாரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களும் இதனால் சேதமடையும்.” என
மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை ஏ.ஞானப்பிரகாசம் கடந்த வருடம் சுட்டிக்காட்டினார்.

மன்னார் தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் இல்மனைட், சிர்கோனியம், ரூட்டில் போன்ற 265 மில்லியன் தொன் கனியவளம் இருப்பதாக அவுஸ்திரேலிய டைட்டேனியம் சேன்ட் நிறுவனத்தின் (TSL) ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த கனிமங்கள் விமானம் மற்றும் வண்ணப்பூச்சு பொருட்கள் உட்பட பல தொழில்களில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த நிறுவனம், தனியார் நில உரிமையாளர்களின் அனுமதியின்றி, 4,000ற்கும் மேற்பட்ட மணல் அகழும் குழிகளை, 12 மீற்றர் ஆழத்தில் தோண்டியிருப்பது, கடந்த வருடம் இடம்பெற்ற மன்னார் பிரஜைகள் குழு கூட்டத்தில் தெரியவந்தது.

மன்னாரில் மணல் அகழ்விற்காக வழங்கப்பட்ட அனுமதி புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தால் மே 4, 2021 முதல் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த அனுமதிப்பத்திரமானது, மன்னார் தீவில் அகழ்வில் ஈடுபடும் குறித்த அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கு சொந்தமான உள்ளூர் பங்குதாரரான கில்சைத் எக்ஸ்ப்ளோரேசன் வரையறுக்கப்பட்ட நிறுவனத்திற்கு சொந்தமானது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஏற்கனவே 63% நிலப்பரப்பு கடல் மட்டத்திற்கு கீழே மூழ்கியுள்ள மன்னார் தீவில் மணல் அகழ்வு இடம்பெறுமாயின் முழு நிலமும் அழிந்து சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பை மீட்க முடியாது என சுற்றாடல் அமைப்புகள் எச்சரித்திருந்தன.

மக்களின் உயிருக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் டைட்டேனியம் சேன்ட் நிறுவனம் மன்னார் தீவில் மணல் அகழ்வது குறித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்திலும் கேள்வி எழுப்பப்பட்டது.

“டைட்டேனியம் சேன்ட் அவுஸ்திரேலிய வணிகங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதால், இந்த வகையான அழிவுகரமான திட்டத்தை தொடர வேண்டாம் என அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்” என செனட்டர் ஜேனட் ரைஸ் நவம்பர் 12, 2020 அன்று அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கூறினார்.