காஸா பகுதியில் நடைபெற்றுவரும் போர்  உடனடியாக நிறுத்தப்படவேண்டுமென ஆர்ப்பாட்டப்பேரணி.

(ஏறாவூர் நிருபர்)  காஸா பகுதியில் நடைபெற்றுவரும் போர் மனிதாபிமானத்தைக்கருத்திற்கொண்டு உடனடியாக நிறுத்தப்படவேண்டுமென மட்டக்களப்பு – ஏறாவூர்ப் பிரதேசத்திலும் இன்று 03.11.2023 ஆர்ப்பாட்டப்பேரணி நடைபெற்றது.
காஸா பகுதியில் இஸ்ரேல் படையினரால் நடாத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்தும் பலஸ்தினத்திற்கு ஆதரவு தெரவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏறாவூர் ஜாமிஅத்து ஜும்ஆப் பள்ளிவாயலில் நடைபெற்ற வெள்ளிக்கிழமை கூட்டுத்தொழுகையினையடுத்து அப்பள்ளிவாயில் முன்றலிலிருந்து ஆரம்பமான இப்பேரணி மட்டக்களப்பு – திருமலை பிரதான வீதிவழியாக சுமார் ஐந்நூறு மீற்றர் தூரத்தைக்கடந்து மணிக்கூட்டுக்கோபுரச்சந்தியை அடைந்தது.
அங்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் சங்கிலித்தொடராக நின்று கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாதைகள் மற்றும் பாலஸ்தீன் நாட்டின் கொடிகளை ஏந்திச் சென்றனர்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு வழிநடாத்தினார்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் கையெழுத்தப்பதிவுகள் நடைபெற்றன. இக்கையெழுத்து அறிக்கை ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு  அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் இஸ்ரேலுக்கு தமது எதிர்ப்;பினைத் தெரிவிக்கும் வகையில் மணிக்கூட்டுக்கோபுரத்தில் கறுப்புத்தணி துண்டுகள் கட்டப்பட்டன.
நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா            இங்கு கருத்துத் தெரிவிக்கையில் –காஸா பகுதியில்               இஸ்ரேல் படையினர் மேற்கொண்டுவரும் குண்டுத்தாக்குதல்களினால் அப்பாவி பொதுமக்கள் பெண்கள் , குழந்தைகள் மற்றும் வயோதிபர்களும் கொல்லப்படுவதை அனுமதிக்க முடியாது. எனவே உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்படவேண்டுமென வலியுறுததினார்.