கடல் காவுகொண்ட தம்பிலுவில் தம்பையா சுவாமிகளின் சமாதி ஆலயம்.

( காரைதீவு  சகா)  திருக்கோவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள மிகவும் மோசமான கடலரிப்பை அடுத்து (3) அதிகாலை தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஸ்தாபகர் அமரர் தம்பையா சுவாமிகளின் சமாதி ஆலயம் கடலுக்குள் காவு கொள்ளப்பட்டுள்ளது.
தம்பையா சுவாமிகளின் சமாதி ஆலயம் சேதமாக்கப்பட்டு சமாதியும், சிவன்சிலையும் கடலுக்குள் இழுத்துச் செல்லப் பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக அங்கு இடம்பெற்று வந்த மோசமான கடலரிப்பால் திருக்கோவில் சித்திர வேலாயுதசுவாமி ஆலய சூழல் மற்றும் தம்பையா சமாதி ஆலயமும் கடலுக்குள் காவு கொள்ளப்படும் பாரிய அபாயம் நிலவிவந்தது.
 குருகுலப் பணிப்பாளர் கண.இராஜரத்தினம் அறிந்து உடனடியாக பிரதேச செயலாளருக்கும், கடலோர பாதுகாப்பு திணைக்கள மாகாணப் பணிப்பாளர் பொறியியலாளர் கே
 துளசிதாசனுக்கும் அறிவித்திருந்தார் .
மாகாண பணிப்பாளர் எந்திரி கே.துளசிதாசன் உடனடியாக செயல்பட்டு 100 மண் மூடைகளை ஏலவே பரப்பி, எதிர்வரும் ஆறாம் திகதி  திங்கட்கிழமை கல்லணை போடுவதற்கு தயாராக இருந்த வேளையில், இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
அந்த பிரதேசத்திலுள்ள தென்னந்தோப்பில், இதுவரை சுமார் 200 தென்னை மரங்கள் மற்றும் 12 கிணறுகள் இதுவரை கடலரிப்பால் கொள்ளப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.