கல்முனை கல்வி வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவ பாராளுமன்ற உறுப்பினர்கள் விளக்கமளிக்கும் செயலமர்வு.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)  கல்முனை கல்வி வலய பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு கல்முனை வலயக் கல்வி அலுவலகம் மற்றும் அல்- மீஸான் பௌண்டஷன் ஆகியவற்றின் அனுசரணையோடு (01.11.2023) சாய்ந்தமருதில் நடைபெற்றது.

நாட்டின் ஜனநாயகம், நல்லாட்சி, பாராளுமன்ற நடைமுறைகள், பாராளுமன்ற சட்டவாக்கம், தலைமைத்துவம் தொடர்பில்  இலங்கையின் முதலாவது முஸ்லிம் அரசியல் துறை பேராசிரியரும், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியுமான பேராசிரியர் எம்.எம். பாஸில் பிரதான வளவாளராக கலந்து கொண்டு விளக்கமளித்தார்.

கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினரும், அல்- மீஸான் பௌண்டஷனின் யூ.எல்.என். ஹுதா உமர், கல்முனை வலயக் கல்வி அலுவலக பிரதி கல்வி பணிப்பாளர் எம்.எச். ஜாபீர் ஆகியோரது ஒருங்கிணைப்போடு நடைபெற்ற இந்த பாராளுமன்ற உறுப்பினரும், உள்ளூராட்சி மாகாண சபைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீ.ல.மு.கா. பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாகவும், வளவாளராகவும் கலந்துகொண்டு மாணவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற நடைமுறைகள், சர்வதேச, தேசிய அரசியல் நடவடிக்கைகள், ஜனநாயகத்தின் பல்வேறு முகங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்தார். இறுதியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன

இதில் கல்வி அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.