அறிவு சார்ந்த பொருளாதாரம் என்பது நடைமுறை ரீதியான ஒன்றாக இருக்க வேண்டும்.

நமது நாட்டில் கல்வி பற்றி பேசும் போது பெண்களின் கல்விக்கு விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றும், பெண்களின் கல்விக்கு பக்க பலத்தை அளிப்பது பொருளாதாரத்தை வலுப்படுத்தும்,உற்பத்தித் திறனை அதிகரிக்கும், பணியிடத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும், அதனூடாக பெண்களுக்கான உரிமைகள்,சமூக உரிமைகள்,பொருளாதார உரிமைகள் என்பன பெண்களிடம் வலுப்பெறும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மக்கள் தொகையில் 52 சதவீதமாக இருக்கும் பெண் தலைமுறையை நாம் மறந்துவிடக் கூடாது என்றும்,பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் முறை நமது நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா என்பதுதான் பிரச்சினைக்குரிய விடயம் என்றும்,இங்கு பெண் பிள்ளைகளின் கல்விக்கு விசேட செயற்திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும்,அறிவை மையமாக கொண்ட பொருளாதாரம் குறித்து பேசினாலும் அது பிரயோக ரீதியாக யதார்த்தமான ஒன்றாக இருக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நுகேகொடை புனித ஜோசப் மகளிர் கல்லூரியில் இன்று நடைபெற்ற கேடட் வாத்தியக் குழுவை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு வரும் வேளையில் நமது நாட்டில் காலாவதியான கல்வி முறை நவீனமயமாக்கப்பட வேண்டும் என்றும்,மனப்பாட கல்வியைத் தவிர்த்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் கல்வி முறை உருவாக்கப்பட வேண்டும் என்றும், ஆங்கில மொழி,தகவல் தொழிநுட்ப கல்வியை 1 ஆம் தரத்தில் இருந்தே புகட்ட வேண்டும் என்றும்,இந்த பாடங்கள் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய அபிவிருத்தி எண்ணக்கருக்கள் மூலம் நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும், புதிய பாடத்திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும்,கல்விக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து எவ்வளவு பணம் ஒதுக்கினாலும் புதிய வேலைத்திட்டம் ஏதும் இல்லை என்றால் அந்த பணம் பலனளிக்காது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மேல் மாகாணத்தின் பிலியந்தலை கல்வி வலயத்தில் நுகேகொடை புனித ஜோசப் மகளிர் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட கேடட் வாத்தியக்குழு,அதிபர் திருமதி ரூபா ரோஹினி சில்வா அவர்களின் அறிவுரையின் பெயரில் 2023 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
புதிதாக உருவாக்கப்பட்ட இந்த கேடட் வாத்தியக்குழுவிற்குத் தேவையான கருவிகள்,பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு தேவையான சீருடைகளை வழங்கி வைக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஏற்பாடு செய்திருந்தார் என்பதோடு,பிள்ளைகளுக்குத் தேவையான இசை வாத்திய கருவிகள் மற்றும் சீருடைகளுக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தனிப்பட்ட நன்கொடையின் மூலம் ரூபா 1,071,500 வழங்கி வைக்கப்பட்டது.