எஸ்.எஸ்.அமிர்தகழியான்)
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித் திட்டங்களுள் ஒன்றான சிறுவர் பாதுகாப்பு குறித்த தேசிய கொள்கை தொடர்பாகத் தெளிவுபடுத்தும் செயலமர்வு உதவி மாவட்ட செயலாளர் ஆ. நவேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (31) இடம் பெற்றது.
இந்நிகழ்வில் சிறுவர் பாதுகாப்புத் தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களிலும் பணிபுரியும் சிறுவர் பாதுகாப்பு, முன் பிள்ளைப் பருவம், சிறுவர் மேம்பாடு மற்றும் பெண்கள் அபிவிருத்தி ஆகிய உத்தியோகத்தர்கள், உளவளத்துணை அதிகாரிகள் எனும் மகளிர் விவகார சிறுவர் விவகார சமூக வலுவூட்டல் அமைச்சின் உத்தியோகத்தர்களுக்குத் தெளிவு படுத்தப்பட்டது.
இதன் போது சிறுவர் பாதுகாப்புத் தேசிய கொள்கைத் திட்டத்தின் கீழ் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் செயற்பாடுகள், துஷ்பிரயோகம் தொடர்பான சட்ட அமுலாக்கத்தைக் கண்காணித்தல், ஆலோசனை வழங்குதல், சிறுவர் பாதுகாப்புக் கொள்கைச் சட்டகம், இக்கொள்கை அமுலாக்கத்தின் போது சம்பந்தப்படும் அமைச்சுக்கள் மற்றும் அவற்றின் வகிபங்கு என்பன தொடர்பாக வளவாளர்களினால் விரிவுரைகள் வழங்கப்பட்டன.
மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் நிஸா றியாஸ் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறுவர் பாதுகாப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் பயிற்சியாளர்களாகப் பயிற்றுவிக்கப்பட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களான அம்பாறை மாவட்ட அதிகாரி ஆர். ஜெகநாதன், நிந்தவூர் பிரதேசத்தின் எம். இம்தியாஸ், லாகுகலை பிரதேசத்தின் உத்தியோகத்தர் ரி. திவ்யா மற்றும் காரைதீவு பிரதேசத்தின் ஜி. ரேவதி ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர்.
இச்சிறுவர் பாதுகாப்புக்கான தேசிய கொள்கை பாதுகாப்பு, நீதி, தொழில் மற்றும் தொழில் வாய்ப்பு, சுகாதாரம், சுற்றுலா, கல்வி, சமூக அபிவிருத்தி, வெகுஜன ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம், அனர்த்த முகாமைத்துவம், சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி ஆகிய அமைச்சுக்களுடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் இத்தேசிய கொள்கையின் கீழ் அபாயங்களை எதிர்நோக்கும், பாதுகாப்பற்ற மற்றும் ஓரங்கட்டப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட, பிள்ளைகளை இனங்காணுதல், அவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் சட்டத்தை அமுல்படுத்தி, விரைவாக சிறுவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குதல், அப்பிள்ளைகளைத் தொடர்ந்தும் பாதுகாத்தல், சிறுவர்களின் தனித்துவமும் ஊடகமும், போன்ற பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.