ஈழத் தமிழர் போராட்டத்தில் பாலஸ்தீன கவிதைகளின் தாக்கம் :

ஐங்கரன் விக்கினேஸ்வரா
ஈழத்தின் படுகொலைகளுக்கு நிகராகவே பாலஸ்தீனத்தில் படுகொலைகள் நிகழ்ந்துள்ளதையும் கவிதைகள் ஆவணப்படுத்தி நிற்கின்றன. இந்த இரு மண்ணிலும் கவிதை ஒரு பேராயுதமாகவும், பெரும் போராயுதமாகவும் திகழ்ந்துள்ளதை காண முடிகிறது.
கவிதை பேராயுதமாக போராயுதமாக:
ஈழத்து போர்க்கால இலக்கியப் பரப்பில் பாலஸ்தீனக் கவிதைகள் பெரும் தாக்கத்தினை உருவாக்கியுள்ளன. ஏனெனில் இரு போராடும் மக்களும் அரசின் ஆக்கிரமிப்புக்கு, அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்தவர்கள். துப்பாக்கிகளைக் காட்டிலும் கவிதை ஆட்சியாளர்களை, அடக்குமுறையாளர்களை கலங்கடிக்கும் பெரும் போராயுதமாக ஓர் காலத்தில் விளங்கியது.
வரலாற்று ரீதியில் பாலஸ்தீனத்துக்கு என்று செறிவான இலக்கிய மரபு உண்டு. மிக நுட்பமான இலக்கண வரம்புக்கு உட்படுத்தப்பட்ட கவிதை வடிவங்கள், நாடகங்கள், நாவல்கள் பாலஸ்தீனத்தில் படைக்கப்பட்டுள்ளன. ஆனால் 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் தோற்றம் பெற்றபோது பாலஸ்தீன இலக்கிய வாழ்வு திடீரென்று மூச்சை இழந்தது.
ஆயினும் துண்டிக்கப்பட்ட உயிர் மூச்சு மீள சுவாசித்தது. போரின் தோல்வி, தோழர்களின் இழப்பு, சிறைக்காவல், சித்ரவதைக்கூடம், சிறுவர்கள் மீதான தாக்குதல், ஐக்கிய நாடுகள் சபையின் பாராமுகம், தாயகம் மீதான ஏக்கம் என கவிதையின் பாடுபொருள்கள் பாலஸ்தீனத்தில் மீள உயிர் பெற்றன.
ஆயினும் பலநூறு இலக்கியப் படைப்புக்கள் ஆக்கிரமிப்பு இராணுவத்தால் அழிக்கப்பட்டன.
மிகச் சில அச்சுநூல்களும் கைப்பிரதிகளும் மட்டுமே காப்பாற்றப்பட்டன.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் பல பாலஸ்தீன கவிஞர்களை சிறையில் அடைத்து வைத்து, அவர்களின் கவிதைகளை தடை செய்தனர். ஆண் கவிகளுக்கு இணையாக பெண் கவிகளும் போரியல் கவிதைகளை சிறப்பாக யாத்தனர். அவர்களின் கவிதைகள் தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டன.
எம்..நுஃமான் தொகுத்த பலஸ்தீனக் கவிதைகள் நூல்:
1980களின் ஆரம்பத்தில் ஈழத் தமிழர் போராட்டத்தில் பாலஸ்தீன கவிதைகளின் தாக்கம் பாரிய வீச்சைக் கொண்டிருந்தது. பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் தொகுத்த “பலஸ்தீனக் கவிதைகள்” கல்முனை வாசகர் சங்க பதிப்பாக நவம்பர் 1981இல் வெளியாகியது.
இந்நூலின் முதலாவது பதிப்பில் ஒன்பது பலஸ்தீனக் கவிஞர்களின் முப்பது கவிதைகள் வெளியாகின. மஹ்முட் தர்விஷ்,பௌசி அல் அஸ்மார், றஷிட் ஹசைன், சலும் ஜுப்றான், தௌபிக் சையத், அன்தோய்னே கபாறா, பத்வாது கான், சமீஹ் அல் காசிம், டூயின் பசைசோ ஆகிய புகழ்பெற்ற பாலஸ்தீன கவிஞர்களின் கவிதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
அத்துடன் பாலஸ்தீனக் கவிதைகள் பற்றி கடாகர்மி எழுதிய கட்டுரை ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இத்தொகுப்பிலுள்ள சமீஹ் அல் காசிமின் ஏழு கவிதைகளை மொழிபெயர்த்தவர் கவிஞர் முருகையன். ஏனையவற்றை பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் மொழிபெயர்த்துள்ளார்.
பாலஸ்தீன எழுத்தாளர்கள் பலரின் எழுத்துலகின் மையத்தில் பாலஸ்தீனப் பேரழிவு தெளிவாக வெளிப்பட்டு உள்ளது. ஏதிலிகளாக்கப்பட்ட, குடிபெயர்ந்த, ஊனமாக்கப்பட்ட மக்களின் வாழ்வில் விழும் துயரப் பெருநிழலை பல்வகைப்பட்ட இலக்கிய வடிவங்களையும் புனைவு வகைமைகளையும் கையாண்டு உலகின்முன் சித்தரிக்க இவர்கள் முயற்சி செய்துள்ளனர்.
1948ல் இஸ்ரேலியர்கள் பல்லாயிரம் பாலஸ்தீனர்களைப் படுகொலை செய்து நூறாயிரத்துக்கும் மேற்பட்டவர்களை தாயகத்தை விட்டு வெளியேற்றியபோது பல நூறு படைப்புக்கள் உருவாகிய போதும், அவை அழிக்கப்பட்டு விட்டன.
காஸா மீதான படையெடுப்பும் பாலஸ்தீனர் வெளியேற்றமும்:
மீண்டும் இரண்டாம் முறை 1967ஆம் ஆண்டு மேற்கு கரை மற்றும் காஸா பகுதிகள் மீது இஸ்ரேல் படையெடுத்தபோது இது நிகழ்ந்தது.
பெரும்பாலும் அகதி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருந்த பாலஸ்தீனர்கள் தம் தாய் மண்ணை விட்டு மீண்டுமொரு முறை அகதிகளாய் வெளியற வேண்டியதாயிற்று. இன்றும் பாலஸ்தீனிய வெளியேற்றம் தொடர்கிறது. நாடு கடத்தல் மட்டுமல்ல, காஸா மீதான படையெடுப்பால் பெருமளவு பாலஸ்தீன மக்கள் வெளியேறுகின்றனர்.
பாலஸ்தீன புலம்பெயர் இலக்கியம்:
1948ஆம் ஆண்டு இடப்பெயர்வுக்கு பின்னர் பாலஸ்தீனத்தில் தங்கள் நினைவுகளைக் கொண்டு தம் தாய்மண்ணைச் சித்தரிக்க முயற்சி செய்தனர். தொலைவிலிருந்த தாயகத்தைத் தம் தந்தையர், அன்னையர், தாத்தாக்கள், பாட்டிகள் சொன்ன உயிர்ப்பு மிகுந்த கதைகளைக் கொண்டு புலம்பெயர்ந்த மண்ணில் பிறந்தவர்கள் அறிந்து கொண்டனர்.
அவர்களது பாலஸ்தீனம் இலக்கியத்தில் ஒரு புதிய இருப்பை அடைந்திருக்கிறது- இருபதாம் நூற்றாண்டின் பின்பாதியில் வெவ்வேறு தலைமுறையினரால் எழுதப்பட்ட கவிதைகள், சிறுகதைகள், நாவல்களில் பாலஸ்தீனம் தன்னை நிறுவிக் கொண்டிருக்கிறது.
போராட்டத்தில் ஏற்பட்ட பிளவுகள் மற்றும் தடைகளைக் கணக்கில் கொண்டால் பாலஸ்தீன போராட்டத்தின் நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்வதில் முதன்மை முக்கியத்துவம் கொண்டதாக இலக்கியம் இருந்து வருவதை மறுக்க முடியாது.
பாலஸ்தீனத்தை அதன் தொலைதூரத்தில் இருந்து மீட்டு, கூட்டுச் சிந்தனையில் அதற்குரிய இடத்தை இலக்கியமே காப்பாற்றிக் கொடுத்திருக்கிறது.
அந்த வகையில், பாலஸ்தீன இலக்கியமானது புலம்பெயர் இலக்கியமாக, உலகில் அடையாளத்துக்கான தேடல், சிதறுண்ட வாழ்க்கை அனுபவங்களாலும் இடம் மாறிய நம்பிக்கைகளாலும் படைக்கப்பட்ட எழுத்து, மானுட துயரத்தின் ஆவணமாக விளங்குகிறது.
பாலஸ்தீன இலக்கிய ஆளுமைகள்:
1948ஆம் ஆண்டுக்குப்பின் படைக்கப்பட்ட பாலஸ்தீன இலக்கியம் புலம்பெயர் இலக்கியமானது, பாலஸ்தீனர்கள் தம் தாய்மண்ணை விட்டு வன்முறையால் விரட்டப்பட்ட துயர வரலாற்றை பிரதிபலிக்கின்றது.
பாலஸ்தீன இலக்கியத்தின் மகத்தான ஆளுமைகளான மஹ்மூத் தார்விஷ், (Mahmoud Darwish), எமில் ஹபிபி (Emile Habiby), பட்வா டூகான் (Fadwa Touqan), சாஹர் கலிபே (Sahar Khalifeh) போன்றோர் பாலஸ்தீனத்தின் உள்ளிருந்து எழுதினார்கள் என்றாலும், மற்றய படைப்புகள் பெரும்பாலானவை புலம்பெயர்ந்த எழுத்தாளர்களால் எழுதப்பட்டவை. அதாவது, அரேபியா, ஐரோப்பா, அல்லது அமெரிக்காவில் இருந்தவர்களின் எழுத்தே பாலஸ்தீன புலம்பெயர் இலக்கியமாக புலப்படுகிறது.
தமிழில் வெளியான பலஸ்தீனக் கவிதைகள் இரண்டாம் பதிப்பில் வெளிப்படையான அரசியல் சார்வுடைய பலஸ்தீனப் படைப்பாளிகளின் வாழ்நிலை அனுபவத்தின் அடிப்படையில் அமைந்த கவிதைகளாகும்.
பாலஸ்தீன பெண் கவிஞர்கள் :
இரண்டாம் பதிப்பில் 15 கவிஞர்களின் 71 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. நிசார் கப்பானியும் ஃபத்வா துக்கான் தவிர்ந்த ஏனைய ஐந்து பெண் கவிஞர்களும் இத்தொகுதியில் புதிதாக இடம்பெற்றனர். நூல் விபரம் 1981 இல் வெளிவந்த முதலாவது பதிப்பில் 9 கவிஞர்களின் 30 கவிதைகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாலஸ்தீனர்களது தனித்துவம் கொண்ட, புதுவித இலக்கிய நடை தம் மண்ணை இழந்த மக்களின் துயர்மிகுர்ந்த பாலஸ்தீன நக்பாவை (பேரழவு) எழுத்தில் கைப்பற்றும் வண்ணம் உலகெங்கும் வியாபித்தது. குறிப்பாக குறிப்பாக, கவிஞர் (மஹ்மூத் தார்விஷ் (Mahmoud Darwish) (1941-2008), நாவலாசிரியர்கள் கஸ்ஸான் கனாபானி (Ghassan Kanafani) (1936-1972), ஜப்ரா இப்ராஹிம் ஜப்ரா (Jabra Ibrahim Jabra) (1920-1994), மற்றும் எமில் ஹபீபி (Emile Habiby) (1921-1996), இவர்களில் தனித்துவம் மிகுந்து நிற்கின்றனர்.
 
ஷெரீப் எஸ்எல்முசாவின் குரலின் ஈரம் :
ஷெரீப் எஸ். எல்முசா (Sharif Elmusa ) அமெரிக்காவில் வாழும் பாலஸ்தீனக் கவிஞர். பேராசிரியராகப் பணியாற்றுகிறார். அவரின் குரலின் ஈரம் கவிதையில் ஆகாய ஆகாயத்திலிருந்து குண்டு போடும் விமானப்படை குண்டு வீச்சாளரிடம் சில கேள்விகள் என்பதாக இந்தக் கவிதை வெளிப்படுகிறது.
பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளின் மீது ஏன் குண்டு போடுகிறீர்கள் என்ற கேள்விக்கு விமானப்படை குண்டு வீச்சாளர் தான் குழந்தைகளைக் குறிவைத்து குண்டு போடவில்லை என்கிறார் ஷெரீப் எஸ். எல்முசா (Sharif Elmusa ) அமெரிக்காவில் வாழும் பாலஸ்தீனக் கவிஞர்.
தேன்கூட்டில் வசிக்கும் தேனீக்களைப் போல நகரெங்கும் குழந்தைகள் வசிக்கிறார்கள். அவர்கள் மீது தானே உங்கள் குண்டு விழுகிறது எனப் பதில் கேள்வி கேட்கப்படுகிறது.
இன்னொரு கவிதையில் அகதிகள் முகாமிற்குப் பெயரில்லை என்ற வரி இடம்பெறுகிறது. அதைக் கடந்து செல்ல முடியாமல் திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டேயிருந்தேன். போரும் போரின் விளைவாக அழிந்த ஊர்களின் நினைவுகளுமே அவரது கவிதைகளில் பிரதானமாக வெளிப்படுகின்றன.
காஸா என்பது திறந்த வெளிச்சிறைச்சாலை. அது ஒரு மாபெரும் கூண்டு என நீளும் கவிதையில் வெளிப்படுத்தி உள்ளார்.
மக்மூத் தார்வீஷ் கவிதைகள்:
இது தனது அகதி வாழ்வின் துயரைப் போன்றதே என்றும் உணருகிறார்.
குறைபாடுள்ள நிலப்பரப்பு என்பது பாலஸ்தீனத்தின் அடையாளம். ஒரு பக்கம் பாலஸ்தீனத்தின் யுத்தம், அழிவு என்ற சூழல் நிலவுகிறது. இன்னொரு பக்கம் அடுத்த வேளை உணவிற்கு என்ன சாப்பிடலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் அவலமிக்க வாழ்வை
1941-ல் அல்பிர்வே என்னும் பாலஸ்தீன கிராமம் ஒன்றில் பிறந்த மக்மூத் தார்வீஷ் தனது கவிதையில் எழுதியுள்ளார்.
ஏழு வயதிலே கிராம மக்களுடன் இஸ்ரேல் ராணுவத்தால் விரட்டப்பட்ட மக்மூத் தார்வீஷ் பாலஸ்தீனத்தை விட்டே துரத்தப்பட்டார். அந்த கிராமத்தை தரைமட்டமாக்கியது ராணுவம். பின்னர் அங்கு யூத குடியேற்றம் நிகழ்ந்தது. தர்விஷ் குடும்பம் சிறிது காலத்திற்கு பிறகு பாலஸ்தீனத்தில் ‘சட்டவிரோதமாக’ குடியேறியது.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில்
1960களில் அவர் தீவிரமாக அரசாங்கத்தால் கண்காணிக்கப்பட்டார். பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக நின்ற இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சியில் 1961-லிருந்து இணைந்து பணியாற்றினார். 1970-க்கு பின்னர் சொந்த நாட்டில் பெரிதும் இன்னலுக்கு உள்ளாகியதால் மாஸ்கோ, பாரீஸ் என்று பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்தார். யாசர் அராபத்தின் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் (PLO) இணைந்தார்.
பாலஸ்தீனத்தில், சுயாட்சி அதிகாரம் கொண்ட ஒரு இடைக்கால அரசு நிர்வாகத்திற்கு வழிகோலும் ஆஸ்லோ ஒப்பந்தத்தை நிராகரித்து, PLO வின் செயற்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார். இறுதி மூச்சு வரை கம்யூனிஸ்ட் உலகப்பார்வையை கொண்டிருந்தார் கவிஞர் தர்விஷ்.
அவர் சென்ற நாடுகளில் எல்லாம் தனது நாட்டையும், மக்களையும், அவர்களின் விடுதலை கனவையும் சுமந்தார். அவருடைய ‘Passers by in Passing Words’ என்னும் கவிதை அரேபிய மக்களால் விரும்பி வாசிக்கப்பட்டு மக்கள் கவிஞர் ஆனார். மக்கள் மருத்துவர், மக்கள் தலைவர் போன்று தர்விஷ் ஒரு மக்கள் கவிஞர்.
முற்றுகையின் கீழ் ரமல்லா :
சமூக உணர்வின் ஆழம் சிறந்த படைப்புகளை பிரசவிக்கும் என்பதற்கு மக்மூத் தார்வீஷின் கவிதைகள் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
இனவெறிக்கு எதிராக இனவாதத்தை அல்ல,சர்வதேசியத்தை முன்வைத்தார். இந்த கவிதை ‘முற்றுகையின் கீழ்’ பாலஸ்தீன நகரம் ரமல்லா முற்றுகைக்குள்ளான போது எழுதப்பட்டது. ரமல்லா அவர் பிறந்த கிராமத்தை உள்ளடக்கிய மலை அடிவாரம். பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் அலுவலகம் அங்கு செயல்பட்டது. முஸ்லிம்களின் சம எண்ணிக்கையில் கிறிஸ்தவர்களும் வாழ்ந்தார்கள்.
முற்றுகை நிலையில், காலம்
நித்தியத்துவத்தில் ஊன்றி நிற்கும் வெளி ஆகிறது
முற்றுகை நிலையில், வெளி நேற்றமையும்,
நாளையையும் தவறவிட்ட காலமாகிறது.
புதிய நாள் ஒன்றில் நான்
வாழப்புகும் ஒவ்வொரு
கணத்திலும் ஒரு தியாகி என்னை வட்டமிடுகிறார்.
என்னிடம் கேள்விகள்
தொடுக்கிறார் :
நீ எங்கே சென்றாய்?
நீ எனக்களித்த ஒவ்வொரு
வார்த்தையையும் திரும்ப
அகராதிக்கு
எடுத்துச் செல்
பின்னர் தூங்குவோரை பின்னொலியின்
சத்தத்திலிருந்து விடுவி என அக்கவிதையில் விபரித்துள்ளார்.