நிலுவை சம்பளம் மற்றும் போனஸை வழங்கக் கோரி, மூன்று மாதங்களாக மூடப்பட்டுள்ள மலையகத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு முன்பாக அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் குழு ஒன்று கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இந்த வருடத்தின் ஓகஸ்ட் மாதம் முதல் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதோடு, மே, ஜூன் மற்றும் ஜூலை ஆகிய மூன்று மாதங்கள் தாம் பணியாற்றியமைக்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என, ஹட்டன் நோர்வூட், நியூவெளியில் அமைந்துள்ள நோர்வூட் பெஷன்ஸ் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்தின் ஆடைத் தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் தொழிலாளி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
“எங்கள் நிலுவைத் தொகையைக் கொடுங்கள். தொழிற்சாலையை நம்பி நாங்கள் காத்திருந்தோம். இனியும் காத்திருக்க முடியாது. சம்பளம் இல்லாமல் காத்திருக்க முடியாது. நிலுவை சம்பளம் மற்றும் பி கார்டை கொடுத்தால் நாங்கள் வேறு எங்காவது வேலைக்கு செல்ல முடியும். ஒரு நல்ல முடிவை எதிர்பார்க்கின்றோம்.”
கடந்த வருடத்திற்கான போனஸ் தொகையான 20,000 ரூபா இதுவரை ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இத்தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மூன்று மாதங்களுக்கான நிலுவை ஊதியம் கிடைக்காததாலும், வேலையிழந்து வருமானம் இல்லாமல் போயுள்ளமையாலும், மிகுந்த வறுமையில் வாடுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இந்த தொழிற்சாலை மூடப்பட்டதால் 2,000க்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். அவர்களில் சுமார் 300 தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
எவ்வாறெனினும், பாதுகாப்புப் பணியாளர்களைத் தவிர, போராட்டக்காரர்களுக்கு பதிலளிக்க தொழிற்சாலை வளாகத்திற்குள் எந்தப் பொறுப்பான அதிகாரியும் இருக்கவில்லை.
நோவூட் பெஷன்ஸ் நிறுவனம் பொல்கஹவெலயில் ஒரு தொழிற்சாலையைக் கொண்டுள்ளது, இது நாளொன்றுக்கு 2,000,000 தைத்த ஆடைகளை உற்பத்தி செய்வதாக முகாமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கொவிட் தொற்றுநோய் நிலைமைக்குப் பின்னர் இலங்கை எதிர்கொண்ட கடுமையான பொருளாதார சவால்கள் காரணமாக பல தொழிற்சாலைகள் மூடப்பட்டதன் காரணமாக முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.