(செல்லையா பேரின்பராசா) கல்முனை மக்கள் வங்கிக்கிளையின் கட்டிடம் உடைக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் புதிய கட்டிடம் அமைக்கப்படாத நிலையில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதையட்டு வங்கி வாடிக்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு முன்னாள் கல்முனை பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரும் நட்பிட்டிமுனை பளீல் பவுண்டேஷன் சமூக சேவை அமைப்பின் தலைவருமான தேசக்கீர்த்தி அப்துல் கபூர் இலங்கை மக்கள் வங்கி தலைவர் சுஜீவ ராஜபக்சவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மக்கள் வங்கி தலைவருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அப்துல் கபூர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கல்முனை நகரம் இலங்கையில் காணப்படும் முன்னணி வர்த்தக நகரங்களில் ஒன்றாகும். அந்த நகரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மத்திய பகுதியில் தனக்கு சொந்தமான இடத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த இரு மாடிக் கட்டிடத்தில் இயங்கி வந்தது.
இந்த வங்கிக் கிளையானது 1972 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் மறைந்த திருமதி சினிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் கல்முனைத் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மர்ஹும் எம்.சி.அகமது அவர்களின் பெருமுயற்சியினால் மக்கள் வங்கியின் 37வது கிளையாக கல்முனையில் திறந்து வைக்கப்பட்டது. இது கல்முனைத் தொகுதியில் திறந்து வைக்கப்பட்ட முதலாவது அரச வங்கியாகும்.
இந்த வங்கிக் கட்டிடமானது கல்முனை நகரத்தின் அழகையும் அதன் தோற்றத்தையும் மெருகூட்டி காட்சியளித்து வந்தது. கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னர் காரணகாரியமின்றி உறுதியாகவும் அழகாகவும் இருந்த இந்த வங்கிக் கட்டிடம் வாடிக்கையாளர்களும் மக்களும் எதிர்பார்த்து இருக்காது நிலையில் உடைக்கப்பட்டு மூன்று மாடிகளை கொண்ட புதிய வங்கிக் கட்டிடம் அமைக்கப்பட உள்ளதாக வங்கி உத்தியோகத்தர்களால் கூறப்பட்டது. வங்கியின் செயற்பாடுகள் வங்கிக்கு முன்னால் உள்ள தனியார் கட்டிடத்திற்கு தற்காலிகமாக மாற்றப்படுவதாகவும் வங்கி உத்தியோகத்தர்களால் தெரிவிக்கப்பட்டது.
இந்த தனியார் கட்டிடத்திற்கு வாடகையாக பெருந்தொகை பணம் வங்கியினால் கடந்த ஆறு வருடங்களாக செலுத்தப்பட்டு வருவதையிட்டு வாடிக்கையாளர்களும் கல்முனை வர்த்தக சங்கமும் மற்றும் பொதுமக்களும் கவலையடைந்துள்ளார்கள். இதுகாலவரையில் வாடகையாக செலுத்திய பணத்தைக் கொண்டே புதிய கட்டிடத்தை கட்டி முடித்திருக்கலாம் என்றும் வாடிக்கையாளர்கள் பேசிக் கொள்கின்றார்கள். இது விடயத்தில் இப்பிரதேச அரசியல்வாதிகளும் வர்த்தக சங்கமும் கண்ணிருந்தும் குருடர்கள் போல் இருந்து வருகின்றார்கள். இந்த வங்கி கட்டிடத்தை உடைத்து மூன்று மாடியில் அமைத்துத் தருமாறு வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் கேட்கவில்லை. புதிய கட்டிடத்தை அமைக்க வசதி இல்லாதவர்கள் உறுதியாகவும் அழகாகவும் இருந்த பழைய கட்டிடத்தை ஏன் உடைத்தார்கள் என்றுதான் வாடிக்கையாளர்களும் வர்த்தக சங்கமும் கேட்கின்றார்கள்.
இலங்கையில் எந்த தொகுதியிலாவது மக்கள் வங்கி கிளைக்கான கட்டிடம் உடைக்கப்பட்டு ஆறு வருடங்களாக புதிய கட்டிடம் அமைக்கப்படாது கிடப்பில் போடப்பட்டு வாடகை கட்டிடத்தில் இயங்குவதை அறிய முடியவில்லை.
ஒரு மனிதன் தொடர்ந்து வாடகை வீட்டில் வாடகை செலுத்தி வாழ விரும்ப மாட்டான். தனக்கான சொந்த வீட்டிலேயே வாழ விரும்புவான். வங்கி அமைந்திருந்த இடம் பற்றைகள் வளர்ந்து கல்முனை நகரத்தின் அழகையும் தோற்றத்தையும் அலங்கோலப்படுத்தி காடாக காட்சியளிக்கின்றது. வாடிக்கையாளர் நன்மை கருதி உடைக்கப்பட்ட கல்முனை மக்கள் வங்கி கட்டிடத்தை விரைவாக நிர்மாணித்து முடிக்க வேண்டும் என்று மக்கள் வங்கி தலைவருக்கு எழுதிய கடிதத்தில் அப்துல் கபூர் தெரிவித்துள்ளார்.