பகிடிவதை என்ற போர்வையில் மாணவர்களின் கல்வியை சீரழிப்போர் மீது கடுமயான நடவடிக்கை எடுக்கப்படும். 

(அஸ்ஹர் இப்றாஹிம்) தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிதாக கல்வியை தொடரவிருக்கும் மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்துவோருக்கு எதிராக கடுமையானதும்,இறுக்கமானதுமான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு 2021/2022 ஆம் கல்வியாண்டுக்கு தென்கிழக்கு பல் கலைக்கழகத்திற்கு கலை, கலாசார பீடங்களுக்கு அனுமதிபெற்ற புதிய மாணவர்களுக்கான கல்வி ஆண்டு ஆரம்ப நிகழ்வு கடந்த திங்கட் கிழமை (16) பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இடம்பெற்ற போது அதிதியாக கலந்து கொண்ட தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.  அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை விடயத்தில் அரசாங்கம் மிகவும் இறுக்கமான தண்டனைகளை அறிமுகம் செய்துள்ளது.பகிடி வதையினால் நாட்டின் உயர்கல்வி பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளது. பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர்கள் கனிஷ்ட மாணவர்களுக்கு அவர்களின் கல்வி தொடர்பாக நல்ல அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கவேண்டுமே தவிர வெறுமனே பகிடிவதை போன்ற செயற்பாட்டினால் அவர்களின் வாழ்க்கையில் விளையாடி கல்வியை சிரழிக்கக்கூடாது.ஆயிரக்கணக்கான மாணவர்கள் க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியபோதும் குறைவான மாணவர்களே பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் அவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதத்தை சிறந்த முறையில் பயன்படுத்த சந்தர்ப்பம் வழங்க வேண்டும். ஒரு பட்டதாரியை உருவாக்குவதற்காக அரசாங்கம் வருடமொன்றுக்கு பல மில்லியன் ரூபாய்களை செலவிடுகின்றது. மக்களின் வரிப்பணத்தில் கல்வியை தொடருகின்ற மாணவர்கள் தமது இலக்கை அடைந்து கொள்வதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் பல கனவுகளுடன் இங்கு வந்திருப்பீர்கள். எனவே,பல்கலைக்கழக வளங்களைப் பயன்படுத்தி நாட்டிற்கும், சமூகத்திற்கும் பெரும் பங்காற்ற வேண்டும்.என தெரிவித்தார்.
.